சூடான செய்திகள் 1

பணப்பரிமாற்றம் தொடர்பில் மக்களே அவதானமாக செயற்படுங்கள்!!!

(UTV|COLOMBO) ஏ.ரீ.எம் இயந்திரங்களின் மூலம் மேற்கொள்ளப்படும் பணப்பரிமாற்றத்தை பாதுகாப்புடன் மேற்கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றின் ஊடாக மத்திய வங்கி இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
மோசடியான கொடுப்பனவு அட்டைகளை உபயோகித்து பணத்தினை மீளப்பெறும் சில சந்தர்ப்பங்கள் பற்றி அண்மைக்காலத்தில் தகவல் கிடைத்துள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பங்களைக் குறைத்துக் கொள்வதற்கும் வங்கி முறைமையின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வேளையில் வாடிக்கையாளர் நிதியின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும் இலங்கை மத்திய வங்கி, மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட வங்கிகள் என்பன ஏற்கனவே காணப்படுகின்ற பாதுகாப்பு அளவிடைகளுக்கு மேலதிகமாக ஏனைய அளவிடைகளை ஆரம்பித்துள்ளன.
தன்னியக்கக்கூற்றுப் பொறிகள் பரிமாற்றல்களின் பாதுகாப்பினை வலுப்படுத்தும் முகமாக வாடிக்கையாளர் ஈ.எம்.வி செயற்படுத்தப்பட்ட கொடுப்பனவு அட்டைகளைப் பயன்படுத்துமாறு மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.
ஈ.எம்.வி  செயற்படுத்தப்பட்ட கொடுப்பனவு அட்டைகள் முற்பக்கத்தில் நன்கு புலப்படக்கூடிய இலத்திரனியல் சிப் ஒன்றினைக் கொண்டிருப்பதை அவதானிக்கமுடியும்.
வாடிக்கையாளரினால் பயன்படுத்தப்படுகின்ற கொடுப்பனவு அட்டையானது ஈ.எம்.வி செயற்படுத்தப்படாதது எனும் பட்சத்தில், வாடிக்கையாளர் குறிப்பிட்ட வங்கிகளிடம் ஈ.எம்.வி செயற்படுத்தப்பட்ட கொடுப்பனவு அட்டையினை வழங்குமாறு கோரிக்கை விடுக்கமுடியும்.
அதன்படி, தன்னியக்கக்கூற்றுப் பொறிகள் பரிமாற்றல்களின் பாதுகாப்பினை உறுதிசெய்வதற்காக கொடுப்பனவு அட்டைகள் மற்றும் தன்னியக்ககூற்றுப் பொறிகளை உபயோகிக்கும்போது மிகுந்த அவதானத்தினையும் விழிப்புணர்வினையும் கொண்டிருக்கின்ற வேண்டுமென வாடிக்கையாளர்களுக்கு இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்துகின்றது.
அடையாளங்காணப்படாத அல்லது அதிகாரமளிக்கப்படாத பரிமாற்றல்கள் மற்றும் காணாமல்போன அல்லது தவறவிடப்பட்ட கொடுப்பனவு அட்டைகள் போன்ற ஏதாவது சந்தர்ப்பங்கள் உடனடியாக குறிப்பிட்ட வங்கிக்கு அறிவிக்கப்படவேண்டும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதேநேரம், சீ.சீ.ரீ.வி கமராக்களில் தென்படாத வகையில் ஏ.ரீ.எம். இயந்திரங்களுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடுபவர்கள் குறித்து காவல்துறையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அரச மற்றும் தனியார் வங்கிகளின் ஏ.ரீ.எம். ஊடாக இடம்பெறும் பண மோசடி குறித்த தகவல்கள் வெளியாகின்ற நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அறிக்கையிடப்பட்டுள்ள இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பில் சீன பிரஜைகள் இருவரும், ரூமேனிய பிரஜை ஒருவரும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள், ஏ.ரீ.எம் இயந்திரங்களுக்கு அருகில் இயந்திரமொன்றை பொறுத்தி, வைப்பாளர்களினால் ஏ.ரீ.எம் இயந்திரத்தினுள் செலுத்தப்படும் அட்டைகளின் தகவல்களைத் திருடி, போலி அட்டைகளைத் தயாரித்து 12 இலட்சம் ரூபா  அளவான பணத்தை திருடியுள்ளனர் என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களிடமிருந்து 200 போலி ஏ.ரீ.எம் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், குறித்த பண மோசடி தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர,  ஏ.ரீ.எம் இயந்திரங்களுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடுபவர்கள் குறித்து அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரியுள்ளார்.

Related posts

அதிக வெப்பமான வானிலை நிலவக்கூடும்…

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

இலங்கையில் அமுலாகவுள்ள புதிய திருமணச் சட்டம்!