அரசியல்உள்நாடு

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் அரசின் நடவடிக்கை என்ன ? சாணக்கியன் கேள்வி

படுகொலை செய்யப்பட்ட தமிழ், சிங்கள மற்றும் முஸ்லீம் ஊடகவியலாளர்களுக்கான இவ் அரசின் நடவடிக்கை என்ன என்று கடந்த 1 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

எனது உரைக்கு செல்லும் முன்னர், இந்த எரிபொருள் விடயத்தில் எவ்வித பிரச்சினையும் இல்லை என நேற்று முதல் அரசாங்கத்தின் சார்பில் அமைச்சரவை அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் கூறும் 5 ஆவது 10 ஆவது தடவை ஆகும்.

ஆனால் மக்கள் எரிபொருளுக்காக இன்னும் வரிரையில் நிற்கின்றனர். அமைச்சர்கள் என்னதான் கூறினாலும் மக்கள் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கின்றனர்.

அதாவது மக்களுக்கு உங்கள் மீதான நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது. ஒருவேளை ஜனாதிபதி ஃபேஸ்புக் லைவில் வந்து இதனை கூறினால் மக்கள் நம்பலாம்.

ஆனால் இந்த ஊடக பேச்சாளர், அமைச்சர்கள் அனைவரும் எரிபொருள் உள்ளது என கூறினாலும் மக்கள் அதற்காக வரிசையில் சென்று காத்திருக்கின்றனர். ஏனெனில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை.

நான் நேற்றும் நிறைய கேள்விகளை எழுப்பி இருந்தேன். ஆனால் அவை எவற்றுக்கும் பதில் இல்லை. கௌரவ ஜனாதிபதியிடமே அவற்றுக்கு பதில் இல்லாத போது, நீதி தொடர்பான அமைச்சரை இக்கட்டான நிலைக்கு தள்ள முடியாது.

ஏனெனில் அவருக்கு வழங்கும் சம்பளத்தை விட இது பாரிய விடயமாகும். கௌரவ ஜனாதிபதி அவர்கள் ஏனைய அனைத்திற்கும் பதிலளித்தார். புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

எனவே கௌரவ பிரதமர் அவர்கள் நீங்களாவது பதிலளியுங்கள். ஆனால் ஜனாதிபதியிடமே பதில் இல்லை என்றால் பேசி வேலையில்லை. பதிலளித்த ஒரே விடயம், தேசிய மக்கள் சக்தியையும் ஜனாதிபதியையும் வேறுபடுத்த தேவையில்லை.

என்னை மட்டும் உயர்த்தி வைக்க தேவையில்லை என அதற்கு மாத்திரம் பதிலளித்து இருந்தார். ஃபொடோகொபி இயந்திரம் ஒன்று தொடர்பில் கௌரவ ஃபைசர் முஸ்தபா கேட்டதற்கு அதற்கு என்றால் பதிலளிக்கப்பட்டது. அந்த மட்டத்தில் தான் அமைச்சரின் அதிகாரங்கள் காணப்படுகின்றன என நான் நினைக்கிறேன்.

கௌரவ அமைச்சர் அவர்களே, இந்த பொறுப்புக்கூறல் விடயத்தில் இன்று நிறைய கேள்விகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை வெளிவிவகார அமைச்சரிடம் கேட்பதற்காக வைத்துக் கொள்கிறேன். இந்த நாட்டிற்குள் இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் சில வழக்குகளை தெரிவுசெய்துள்ளேன்.

அதில் ஊடவியலாளர் மயில்வாகனன் நிமலராஜன் அவர்களின் கொலை. அவர் 2000ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்டார். அடுத்ததாக 2006 இல் ட்ரிங்கோ 05 என்ற வழக்கு. இது தொடர்பில் நீங்களும் அறிவீர்கள்.

இதற்கு நீதி கோரி நீங்களும் குரல் எழுப்பியிருந்தீர்கள். 2008- 2009இல் 11 பேர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ‘மிசிங் 11’. 2009 லசந்த விக்ரமதுங்க, 2010 பிரகீத் எக்னலிகொட.

லசந்த விக்ரமதுங்க குறித்து என்றால் ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொள்ள கூடியதாக உள்ளது. ஆறு தினங்களுக்கு முன்னர் 23ஆம் திகதி ஊடகவியலாளர் ஒருவரின் கொலை (மர்டர் ஒஃப் ஜர்னலிஸ்ட்) என தி ஐலன்ட் பத்திரிகையில் கட்டுரையொன்று வெளியாகியுள்ளது.

அதில் லசந்த விக்ரமதுங்க கொலையாளிகளை விடுதலை செய்யப்பட்டமை அல்லது வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டமையை நிறுத்திவைக்குமாறு கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பினை அவசரப்பட்டு செயற்படுத்த வேண்டாம் அதனை நிறுத்திவைக்குமாறு கோரப்பட்டுள்ளது. அவ்வாறாயின் லசந்த விக்ரமதுங்கள் வழக்கில் ஏதோவொரு விடயம் உள்ளது.

இந்த வழக்குகள் தொடர்பில் உங்களது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? ஜனாதிபதி அதிகாரத்திற்கு வந்து ஐந்து மாதங்கள் கடந்துவிட்டன. சாதாரணமாக ஜனாதிபதி ஒருவரின் காலத்தில் பத்தில் ஒரு பங்கு முடிந்துவிட்டது. அதனால் இன்னும் காலம் தேவை காலம் தேவை என்று கூறிக் கொண்டு இருக்க முடியாது.

புலனாய்வ ஆணைக்குழுவொன்றை நியமிக்கும் செயற்பாடு இலங்கை வரலாற்றில் உண்டு. ட்ரிங்கோ-05 கொலையை மேற்கொண்ட சந்தேக நபர்கள் தொடர்பில் உடலகம ஆணைக்குழு சாட்சியங்களிடம் விசாரணை மேற்கொண்டு காணொளி ஆதாரம் ஒன்றை பெற்றுள்ளது.

இதில் யார் தொடர்புபட்டுள்ளது? வசந்த கரன்னாகொடவா தொடர்புபட்டுள்ளார் என்பது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு காணொளியாக பதிவு செய்துள்ளனர்.

அதற்கு அடுத்து 2020இல் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பின்னர் பழிவாங்கல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவை கொண்டுவந்து அவர்களது வழக்குகளை மூடி மறைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.

நாம் தற்போது யாருக்காகவும் முன்னிற்கவில்லை. நாம் கேட்பது சாதாரணமான ஒரு கேள்வி. நாட்டில் நீதியை நிலைநாட்டுவது தொடர்பில் சந்தேகம் காணப்படுவதனாலேயே நான் இந்த கேள்வியை எழுப்பியுள்ளேன்.

இந்த பழிவாங்கல் தொடர்பான விசாரணை ஆணைக்குழு ஊடாக வசந்த கரன்னாகொட உள்ளிட்ட சகலரையும் இந்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ரவிராஜ் அவர்களின் கொலை, ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் கொலை வசீம் தஜுடீனின் கொலை வெலிகட சிறைச்சாலை கொலை, பிரகீத் எக்னலிகொட கொலை.

தற்போதைய அரசாங்கம் இந்த குறிப்பிட்ட கொலை வழக்குகள் தொடர்பில் மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன? நாங்கள் குரல் பதிவுகளை வெளியிட மாட்டோம். நாம் இவை பற்றி குறிப்பிடமாட்டோம் என ஜனாதிபதி நேற்று அழகாக குறிப்பிட்டார்.

நேற்று இன்று நடப்பவற்றை கூறாதிருப்பது சரி. ஆனால் இந்த வழக்குகள் சுமார் 20 ஆண்டுகள் பழமையானவை. இவை குறித்து விசாரிக்கின்றீர்களா இல்லையா? இல்லையென்றால் ஏன் விசாரிப்பதில்லை.

யார் என்ன கூறினாலும் இவை அரசியல் தலையீடுகள் காரணமாக மூடிமறைக்கப்பட்ட விடயங்கள்.

அதற்கு மேலதிகமாக இங்கு பல வழக்குகள் காணப்படுகின்றன. கௌரவ நீதி அமைச்சருக்கு தேவை எனில் நான் அதை வாசிக்கின்றேன். அதேபோல இலங்கை தமிழ் சங்கத்தினுடைய ஒரு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

34 கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள். அதில் அதிகமானோர் தமிழ் ஊடகவியலாளர்கள் என்பது மிக முக்கியமான விடயமாகும். 2004ஆம் முதல் 2009ஆம் வரை தமிழ், சிங்கள, முஸ்லிம் என சகல ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டனர்.

இந்த பட்டியலில் ஐயாதுரை நடேசன், கந்தசுவாமி பாலானந்தராஜா, லங்கா ஜயசுந்தர, தர்மரட்னம் சிவராம், கன்னமுத்து அரசகுமார், செல்வரட்னம், ஃபலீல், நவரட்னம், சுகர்தராஜன், கனநாதன் ஜோர்ஜ் சகாயதாஸ், கிருஷ்ணபிள்ளை, ரஞ்சித் குமார், லக்மால் டி சில்வா, மனோஜ், மனோஜன்ராஜ், விஸ்வநாதன், பாஜ்கரன், சிவமகராஜா, இராமசந்தின், ரவீந்திரன், சந்திரபோஸ் சுதாகர், நிமலராஜா, சுபாஜினி, லிம்பியோ, தர்மலிங்கம், தேவகுமார், லசந்த விக்ரமதுங்க, புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி இதெல்லாம் கௌரவ நீதி அமைச்சர் அவர்களே 2004ஆம் ஆண்டு முதல் 2009 வரையான காலப்பகுதியில் கொல்லப்பட்ட தமிழ் பேசும் ஊடகவியலாளர்களின் பட்டியல். நான் இதற்கு முன்னதாக கேட்டது, ஒரு சில விடயங்கள் குறித்து நாங்கள் ஆராய்வோம் என நீங்கள் சர்வதேச சமூகத்தினரிடம் இணங்குனீர்கள்.

அதில் முக்கியமாக திருகோணமலையில் கடத்தப்பட்டு கொல்லப்பட்டவர்கள் உள்ளிட்ட ஆறேழு விடயங்களை நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். எல்லா விடயங்களையும் மொத்தமாக ஆராய்வது கடினம். எனவே இந்த விடயங்களை முதலில் ஆராய்ந்து பதில் கூறுவதாக 2015 அரசாங்கத்திடம் கூறப்பட்ட விடயங்கள்.

ஆனால் கடந்த கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்திலே பழிவாங்கல் தொடர்பான விசாரணை ஆணைக்குழு கொண்டுவரப்பட்டு இந்த அனைத்து விடயங்களையும் மூடிமறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது ஊழலற்ற நேர்மையான அரசாங்கம் என உங்களுக்கு ஒரு ஆணையை வழங்கியுள்ளார்கள். அதனை காப்பாற்றுங்கள். அதனை காப்பாற்றுவதாக இருந்தால் ஆகக் குறைந்தது நான் கேட்ட இந்த கேள்விகளுக்காவது பதில் அளிக்க முடியுமா என்று பார்ப்போம். நேற்று அரசியலமைப்பு பற்றி கேள்வி எழுப்பிய நிலையில் ஜனாதிபதி கூட பதிலளிக்காமல் தப்பி ஓடிவிட்டார். காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் குறித்து கேட்ட போதும் தப்பி ஓடிவிட்டார்.

எனது முதலாவது உரையில் நான் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பற்றி கேட்ட போது அது என்னுடைய துறை இல்லை என நீங்கள் குறிப்பிட்டீர்கள். உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நாம் நிராகரித்திருக்கின்றோம். ஆனால் இதில் உங்களுடைய நிலைப்பாடு என்ன? காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம், நஷ்டஈடு வழங்கல் இவை இரண்டிற்குமான ஒதுக்கீடுகள் கடந்த வருடம் போலவேயே இருக்கின்றது. கடந்த வருடத்தின் இந்த ஒதுக்கீடுகளை வைத்து ஒன்றும் செய்ய முடியாமையினாலேயே எந்தவொரு வேலையும் நடைபெறவில்லை என்பது உங்களுக்கு தெரியும். நாங்கள் அந்த நிறுவனங்களை ஏற்றுக் கொள்ளாவிடினும், அதுதான் அரசாங்கத்தின் முன்மொழிவு. இதற்கு ஒதுக்கப்பட்ட தொகை கடந்த வருடத்தைவிட இந்த வருடம் 5 மில்லியன் ரூபாய் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது.

கௌரவ நீதி அமைச்சர் அவர்களே உங்களது சம்பளத்தைவிட உயர்வான கேள்வி ஒன்றையே நான் கேட்டிருக்கின்றேன். எனவே உங்களது அரசியல் பணியகத்தில் கூடி ஆராய்ந்தாவது இதற்கு பதிலளியுங்கள்.

வீடியோ

Related posts

கொரோனாவிலிருந்து 3,254 பேர் குணமடைந்தனர்

கூட்டத்தை பார்த்து தீர்மானிக்காதீர்கள் – திலித் ஜயவீர

editor

வெள்ளவத்தையில் துப்பாக்கிச் சூடு!