நெல்லுக்கான உத்தரவாத விலை இந்த வாரம் அறிவிக்கப்படும் என வர்த்தக, வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நெல்லுக்கான உத்தரவாத விலை விரைவில் அறிவிக்கப்படாவிட்டால், விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர் என விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
2024 – 2025 பெரும்போகத்திற்காகக் கிழக்கு மாகாணத்தில் பயிரிடப்பட்ட நெல், அறுவடை பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், வடமத்திய மாகாணத்தின் சில பகுதிகளிலும் நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில பகுதிகளில் மழையினால் ஏற்பட்ட சேதம் காரணமாக விவசாயிகள் திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாகவே நெல் அறுவடையை ஆரம்பித்துள்ளனர்.
எவ்வாறாயினும், நெல் உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களில் நெல் அறுவடை இன்னும் முறையாக ஆரம்பிக்கப்படவில்லை என வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
விவசாயிகளிடம் கலந்துரையாடி ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் நெல் உற்பத்திக்கு ஏற்படும் செலவினை அமைச்சுக்குச் சமர்ப்பித்துள்ளது.
மட்டக்களப்பு மன்னார் ஆகிய மாவட்டங்களில் அறுவடை இன்னும் நிறைவடையவில்லை.
அம்பாறை மாவட்டத்தில் 20 சதவீதமான அளவில் கூட நெல் அறுவடை மேற்கொள்ளப்படவில்லை.
அத்துடன், நாட்டில் மூன்றில் இரண்டு பங்கு நெற் செய்கை மேற்கொள்ளப்படும் அனுராதபுரம், பொலன்னறுவை அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் இன்னும் முழுமையாக நெல் அறுவடை ஆரம்பிக்கப்படவில்லை.
எனவே, அறுவடை ஆரம்பிக்கப்படும் நிலையில், நெல்லுக்கான உத்தரவாத விலையை நிர்ணயிக்குமாறும் விவசாயிகள் கோரியுள்ளனர்.
அதற்கமைய, இந்த வாரத்தில் நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்கப்படும் என வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.