சூடான செய்திகள் 1

நீர்ப்பாசன, குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட அரச அதிபர்களின் பங்கேற்புடன் உயர்மட்டக் கூட்டம்!

வன்னி மாவட்டத்தின் நீர்ப்பாசனத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தடைகளைத் தீர்க்கும் வகையில், ஒருமாத காலத்துக்குள் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு அரசாங்க அதிபர்கள் பங்கேற்கும் உயர்மட்டக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து, உரிய தீர்வைப் பெற்றுக்கொள்வதற்காக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் முன்வைத்த ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதற்கான அங்கீகாரமும் வழங்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று காலை (25) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில், அதன் இணைத்தலைவர்களான அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வடமாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன், பிரதியமைச்சர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர்.சிவமோகன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கேதீஸ்வரன் இந்தக் கூட்டத்தை நெறிப்படுத்தினார்.

இந்தக் கூட்டத்தின் போது, விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனம் மற்றும் வன்னி மாவட்ட மக்களின் குடிநீர்ப் பிரச்சினை தொடர்பில், நீர்ப்பாசன அதிகாரிகள் மற்றும் சமூகநல இயக்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கருத்துத் தெரிவித்து, அது தொடர்பாக கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட முன்மொழிவுகள் குறித்தும் பிரஸ்தாபித்தனர். வன்னி மாவட்டத்தின் முக்கிய ஆறுகளான பாலியாறு, பறங்கியாறு தொடர்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அதிகாரிகளிடம் வினவிய போது அவர்கள், அந்த ஆற்று நீரை நீர்ப்பாசனத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்த தாம் எடுத்த முயற்சிகளையும், அது தொடர்பான செயற்திட்டங்களையும் தெளிவுபடுத்தினர்.

பாலியாற்றுக்கு நீரைப் பெற்றுக்கொள்ளும் பிரதான ஆறாக, பறங்கியாறு இருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். அத்துடன் பாலியாற்றில் இருந்தே வவுனிக்குளத்துக்கு நீர் பெறப்படுவதாகவும், வவுனிக்குள நீரை இடைமறித்து யாழ்ப்பாணத்துக்கும் நீரைக் கொண்டு செல்லும் திட்டங்கள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

பறங்கியாற்று நீர் வீணாகிப் போவதை தடுப்பதற்கும் இன்னுமொரு செயற்திட்டம் இருக்கின்றது. எனினும், இவ்வாறான செயற்திட்டங்களை முன்னெடுப்பதில் காடுகள் தடையாக இருக்கின்றன. காரணம், காடுகளை அழிக்காமல் இதனை முன்னெடுக்க முடியாது என்பதால் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன என்று நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

“வன்னி மாவட்டத்தின் அரிய பொக்கிஷங்களான இந்த ஆறுகளிலிருந்து கடலுக்குள் நீர் விரயமாவதை தடுத்து, அதனை பயனுள்ளதாக மாற்ற வேண்டும். எனவே இது தொடர்பில் வன்னி மாவட்டத்தின் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு அரசாங்க அதிபர்களுடன் ஒரு உயர்மட்டக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்வதே பிரச்சினையை விரைவாக தீர்க்க உதவும். அத்துடன், அந்தக் கூட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரிகள், இராணுவ, பொலிஸ் மற்றும் கடற்படை உயரதிகாரிகளும் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்” என்றும் அமைச்சர் ரிஷாட் கொண்டு வந்த ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

பறங்கியாறு, பாலியாறு நீர்ப்பாசனத் திட்டங்கள் தொடர்பில் தம்மிடம் இரு வேறுபட்ட செயற்திட்டங்கள் இருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்ட போது, மாகாண சபை அங்கீகாரத்துடன் அதனைச் சமர்ப்பித்தால் மத்திய அரசுக்கு இந்தத் திட்டங்களை கொண்டு செல்ல முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.

இன்று காலை இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில், சமுர்த்தி பிரச்சினை, சுகாதாரம், மருந்தகங்கள் தொடர்பான பிரச்சினை, வீதி அபிவிருத்தி சம்பந்தமான பிரச்சினைகள் மற்றும் இன்னோரன்ன பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டு சில பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வும் எட்டப்பட்டது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

 

Related posts

தியதலாவ பகுதியில் டி-56 ரக இரவைகள் மீட்பு

சாதாரண தர பரீட்சை – விடைத்தாள் திருத்தும் திகதி அறிவிப்பு

ஏப்ரல் முதல் பிஸ்கட் வகைகளுக்கும் நிறக்குறியீடு