உள்நாடுசூடான செய்திகள் 1

நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

நாச்சதுவ நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், தற்போது மல்வத்து ஓயாவிற்கு வினாடிக்கு 3,700 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மல்வத்து ஓயா படுகையின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் என்பதால், சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

நீர் அளவீடுகளின் பகுப்பாய்வின் அடிப்படையில், அடுத்த 48 மணி நேரத்திற்குள் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள வெங்கலச்செட்டிக்குளம், மடு, முசலி, நானாட்டான் ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ளம் ஏற்படக்கூடும் என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், அவ்வழியாக செல்லும் வாகன சாரதிகளும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கல் ஓயா படுகையின் மேல் மற்றும் நடுத்தர பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு காரணமாக கல் ஓயாவின் நீர்மட்டம் வெள்ளப்பெருக்குக்கு ஏற்படும் மட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, படுகையின் கீழ் பகுதிகளில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, அம்பாறை, தமண, எராகம, மடுல்ல, நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்டப்பட்ட தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், அந்தப் பகுதிகள் வழியாகப் பயணிக்கும் வாகன சாரதிகளும் இது தொடர்பாக மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், நிலவும் ஆபத்தான நிலைமை குறித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அனர்த்த முகாமைத்துவ பிரிவுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Related posts

ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு; நாட்டில் வெள்ளம் ஏற்படும் அபாயம்

தேர்தல்கள் ஆணைக்குழு கட்சிகளின் செயலாளர்களுடன் விசேட சந்திப்பு

24 வயது இளைஞன் ஒருவனை பலி வாங்கிய சீதாவக்கை ஆறு