நீர்கொழும்பு பொது மருத்துவமனையில் இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
குறித்த இளம் பெண் கடந்த மாதம் 31 ஆம் திகதி தனது தாயாருடன் பல்வலி மற்றும் தோல் நோய்க்கு சிகிச்சை பெற நீர்கொழும்பு பொது மருத்துவமனைக்கு வந்திருந்தார்.
இதன்போது தன்னை பரிசோதித்த மருத்துவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக நீர்கொழும்பு பொது மருத்துவமனை பணிப்பாளர் மூலம் நீர்கொழும்பு பொலிஸ நிலையத்தில் முறைப்பாடு அளித்திருந்தார்.
இதன்படி, சம்பந்தப்பட்ட இளம் பெண்ணை கடந்த 2 ஆம் திகதி தடயவியல் மருத்துவரிடம் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்ததாகவும், ஆனால் வழங்கப்பட்ட மருத்துவ அறிக்கையில் அந்த இளம் பெண் திருப்தி அடையாததால், பாதிக்கப்பட்டவரை விசேட மருத்துவர் ஒருவரால் பரிசோதிக்க நடவடிக்கை எடுத்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கமும் ஓர் அறிக்கையை வெளியிட்டு, சங்கத்தின் யாப்பை மீறியதற்காகவும், ஒழுக்கக்கேடாக நடந்து கொண்டதற்காகவும் பல ஆண்டுகளுக்கு முன்பு தனது சங்கத்திலிருந்து அவர் நீக்கப்பட்டதாக கூறியுள்ளது.
இருப்பினும், அரசு மருத்துவமனையில் நடந்த இந்த கடுமையான சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும், சட்டம் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சங்கம் கூறுகிறது.