கல்முனை நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடிய சந்தேக நபரை நேற்று வியாழக்கிழமை இரவு வேளையில் நிந்தவூர் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அட்டப்பளம் பகுதியில் ஆடு திருடிய இரண்டு சந்தேக நபர்களை நிந்தவூர் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இதில், ஒரு சந்தேக நபர் கடந்த 2025.02.13ம் திகதி கல்முனை நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடியவர் என தெரியவந்துள்ளது.
சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும், சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய சந்தேக நபர் ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, சந்தேக நபர்கள் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் என்பன சட்டநடவடிக்கைக்காக நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைதான இருவரிடமும் மேற்கொண்ட மேலதிக விசாரணையின் போது குறித்த சந்தேக நபருக்கு நிலுவையில் ஆடு, மாடு, தங்க நகை உள்ளிட்ட பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஐந்துக்கு மேற்பட்ட பிடியாணை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த கைது நடவடிக்கையானது அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஜி.டி.எஸ். அமரசிங்க நெறிப்படுத்தலில் அக்கரைப்பற்று பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நந்தநாராயணவின் வழிகாட்டுதலில் நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நஜீம் தலைமையிலான குழுவினரினால் இக் கைது நடவடிக்கை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்