முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் மட்டுமன்றி மேலும் பல சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (18) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள், அரசாங்கத்துடனான கொடுக்கல் வாங்கல் காரணமாகவா தேஷ்பந்து தென்னகோனை கைது செய்யாமல் இருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.
இதேவேளை, தேசபந்து தென்னகோனின் பணி இடைநிறுத்தம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியதுடன், அது தொடர்பில் விளக்கமளித்த அமைச்சர், பொலிஸுக்கு பொறுப்பான அமைச்சர் இது தொடர்பில் எதிர்காலத்தில் அறிவிப்பார் எனவும் தெரிவித்தார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக, அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கூறியதாவது:
“தேசபந்து தென்னகோன் மட்டுமல்ல, இன்னும் சிலரும் இருக்கிறார்கள், அவர்களை கைது செய்ய பொலிஸ் குழுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. நீங்கள் எங்களிடம் சொல்லவில்லையே, பிரசன்ன ரணவீரவுடன் ஏதோ ஒரு டீல் இருக்கிறது என்று. நாங்கள் அவரையும் தேடுகிறோம். செவ்வந்தியையும் தேடுகிறோம்.
மேலும் உங்களுக்கு பெயர் தெரியாத சிலரையும் தேடுகிறோம். பொலிஸ் குழுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கணேமுல்ல சஞ்ஜீவ கொலை வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. அதில் இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் ஒரு சிறைச்சாலை காவலரும் உள்ளனர். இந்த விசாரணைகள் நடந்து கொண்டிருக்கும்போது, அரச இயந்திரத்திற்குள்ளும் அதிகாரிகள் கைது செய்யப்படும் அளவிற்கு விரிவடைந்துள்ளது. பொலிஸார் தீவிரமாக செயல்பட்டு வருவதாக சொல்லலாம்.
அதனால் தப்ப முடியாது. எங்களுக்கு தெரியாத, பொலிஸுக்கு தெரியாத விடயங்கள் உங்களுக்கு தெரிந்தால், அதை முன்வைப்பதுதான் நல்லது. நிச்சயமாக சட்டம் செயற்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்த முடியும்.” என்றார்