நாளை (14) மின்வெட்டு ஏற்படுமா, இல்லையா? என்பது தொடர்பான அறிவிப்பு நாளை காலை வௌியிடப்படும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நுரைச்சோலையின் நிலைமையைக் கருத்தில் கொண்டு, நாளைய தினம் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, தேசிய மின்சார அமைப்பில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வு காரணமாக, நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் உள்ள மூன்று மின் பிறப்பாக்கிகள் செயலிழந்திருந்தன.
இதன் விளைவாக, மின்சார தேவையை நிர்வகிக்க முடியாததால், திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ஒன்றரை மணி நேர மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்தது.
இருப்பினும், பௌர்ணமி தினம் என்பதால் நேற்று (12) குறைந்த மின்சார தேவையை சமாளிக்க முடிந்ததால், மின்வெட்டு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
இருப்பினும், தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு இன்றும் ஒரு மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபை இன்று காலை அறிவித்தது.
இதற்கிடையில், நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தில் உள்ள மூன்று மின் பிறப்பாக்கிகளை மீட்டெடுத்து, தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க மின் பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் விரைவாக செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.