அரசியல்உள்நாடு

நாம் பில்லியன் கணக்கில் நாட்டுக்கு சேவை செய்துள்ளோம் – சஜித் பிரேமதாச

நான் 50 இலட்சம் ரூபா பெருமதியான பஸ் ஒன்றை தம்புத்தேகம வித்தியாலயத்துக்கு வழங்கி 48 மணித்தியாலங்கள் கடக்க முன்பு வெற்றுத்தலைவர்கள் சிலர் தனக்கு பஸ் மேன் என்று பெயர் சூட்டினார்கள்.

76 வருட ஜனநாயக வரலாற்றை கொண்ட இலங்கை நாட்டில் முதல் தடவையாக ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியாக இருந்து இந்த அளவுக்கு சேவைகளை செய்திருக்கின்றது.

பிரபஞ்சம் மற்றும் மூச்சு போன்ற வேலை திட்டங்களின் ஊடாக பாடசாலை கட்டமைப்பிற்கு பெருமை சேர்த்திருக்கின்றோம். அந்தத் தொகையானது கிட்டத்தட்ட ஒரு பில்லியன் அளவானது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வெற்றிப் பேச்சுத் தலைவர்களால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. வேலை செய்யக்கூடியவர்களால் மாத்திரமே நாட்டை கட்டியெழுப்ப முடியும். தன்னால் சேவை செய்ய முடியுமான சிறந்த ஞானமுள்ள சிறந்த குழுவொன்று தம்மோடு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் பதினைந்தாவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (25) பிற்பகல் அநுராதபுரம், தம்புத்தேகம நகரில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் என பெரும் திரளானோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

விவசாயத்துறையை கட்டியெழுப்பும் நோக்கில் உயர் தரமான விதைகளையும், உயர்தரமான உரங்களையும் பெற்றுக் கொடுப்பதோடு 50 கிலோ கிராம் உள்ள உரமூடையை 5000 ரூபாவுக்கு பெற்றுக் கொடுக்கவும், சகித்துக் கொள்ளக் கூடிய விலையில் இரசாயன திரவ பொருட்கள் கமநல சேவை மத்திய நிலையங்கள் ஊடாக, ஊழல் மோசடி அற்ற முறையில் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதோடு, எரிபொருள் நிவாரணங்களையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொரோனா அச்சுறுத்தல், உர மோசடி, நானோ உர ஊழல் போன்றவற்றின் ஊடாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

தம்முடைய சொத்துக்களையும், தங்க ஆபரணங்களையும் அடகு வைத்து விவசாயம் செய்தவர்கள் இன்று கடன் சுமைக்குள் சிக்குண்டு காணப்படுகின்றார்கள். எனவே இந்த விவசாய கடன்களை இரத்துச் செய்வோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தோடு நட்புறவுடன் நடந்து கொண்டிருக்கின்ற உயர்நிலையில் உள்ள செல்வந்தர்களின் கடன்களை இரத்துச் செய்ய முடியும் என்றால், அப்பாவிகளான இந்த விவசாயிகளின் கடன்களையும் இரத்து செய்ய முடியும். உயர் நிலையில் உள்ள செல்வந்தர்களுக்கு மாத்திரமில்லாமல் இந்த விவசாயிகளுக்கும் சமமான இடம் கொடுக்கப்பட வேண்டும்.

செல்வந்த நட்புறவாளர்களுக்காக இரத்து செய்யப்பட்ட இந்த கடன்களை மீண்டும் பெற்றுக் கொள்வதோடு, அந்தப் பணத்தின் ஊடாக விவசாயிகளின் கடன்களை இரத்து செய்வோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் நுண்ணிதி கடன் பொறிக்குள் சிக்கி இருக்கின்ற மக்களை மீட்டெடுப்பதோடு அதற்கு மேலதிகமாக விவசாயிகளின் விவசாயத்திற்காக நவீன உபகரணங்களை கொள்வனவு செய்து கொள்வதற்கு இலகு கடன் முறையையும் அறிமுகப்படுத்துவோம்.

அத்தோடு 10 இலட்சம் புதிய தொழில் முனைவர்களை உருவாக்கி தொழில் வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியுமான செலவுடன் கூடிய மூலதனத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தத் துறைக்குள் பிரவேசிக்க கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது தெரிவித்தார்.

Related posts

அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம்

ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற பதவிக்காலம் தொடர்பாக அமைச்சரவை அங்கீகாரம்

கொரோனா வைரஸ் – மேலும் மூவர் அடையாளம்