அரசியல்உள்நாடு

நாமல் ஆட்சிக்கு வருவது கனவிலும் நடக்காது – நிமல் லான்சா எம்.பி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தை தீயிட்டு கொளுத்துவதற்கு இடமளிக்காமல் ஜனநாயகத்தை பாதுகாக்காமல் இருந்திருந்தால், நாடு பங்களாதேஷை விட கீழ் மட்டத்திற்கு வீழ்ந்திருக்கும்.

இலங்கையில் அவ்வாறானதொரு சூழல் ஏற்படக் காரணமானவர்கள் ராஜபக்ஷர்களே. எனவே நாமல் ஆட்சிக்கு வருவது கனவிலும் நடக்காது என பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.

திவுலப்பிட்டிய பிரதேசத்தில் வியாழக்கிழமை (29) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த 102 பேர் ராஜபக்ஷர்களை விட்டு வெளியேறி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்துள்ளனர்.

35க்கும் மேற்பட்ட கட்சிகள், அமைப்புகள் அவருக்கு ஆதரவாக வந்துள்ளன. 112க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஆட்சி கையளிக்கப்பட்ட போது ராஜபக்ஷ குடும்பமே அரசாங்கத்தில் அங்கத்துவம் வகித்தது. அதுவே அவர்களது தோல்விக்கும் வழி வகுத்தது.

எனவே பரீட்சித்துப் பார்ப்பதற்காக கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களித்ததைப் போன்ற தவறை ஜே.வி.பி.க்கு வாக்களிப்பதன் மூலம் மக்கள் செய்து விடக் கூடாது.

2022இல் நாட்டில் நிலவிய அரசியல், பொருளாதார நெருக்கடிகளின் போது வன்முறைகள் தலைதூக்கின. அத்தியாவசிய பொருட்களுக்காக வரிசைகளில் காத்திருந்து மக்கள் மரணித்ததை மறக்க முடியாது.

அவ்வாறானதொரு நிலைமை மீண்டும் ஏற்படுவதற்கு வாய்ப்பளித்து விடக் கூடாது. எனவே ரணில் விக்கிரமசிங்கவே மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டும்.

ராஜபக்ச அரசாங்கம் எம்மை வீதியில் நடக்க முடியாத நிலைக்கு ஆளாக்கியது. இரண்டு வருடங்களுக்குள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதனை மாற்றியமைத்தார்.

முப்பது வருடங்களாக மக்களுடன் உழைத்து கட்டியெழுப்பிய அரசியல் அந்தஸ்தையும் ராஜபக்ஷர்கள் அழித்துவிட்டனர். நாமல் ராஜபக்ச ஆட்சிக்கு வருவது கனவில் கூட நடக்காது என்றார். 

-எம்.மனோசித்ரா

Related posts

யாழ்ப்பாணத்தில் தீ மூட்டி எரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்!

கொழும்பிலுள்ள தந்தையை பார்க்க துவிச்சக்கரவண்டியில் சென்ற அட்டாளைச்சேனை சிறுவன் – பொலிஸாரினால் மீட்பு

ஈஸ்டர் தாக்குதலும் அரசின் காய் நகர்த்தல்களும் [VIDEO]