உலகம்

நான்காவது முறையாக சுகாதாரத்துறை அமைச்சர் மாற்றம்

(UTV | பிரேசில்) – பிரேசில் நாட்டில் இதுவரை 1 கோடியே 15 லட்சத்து 25,477 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் பிரேசில் உள்ளது. அங்கு கொரோனா பலி எண்ணிக்கை 2 லட்சத்து 80 ஆயிரத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது.

ஜனாதிபதி ஜெயிர் போல்சனரோ தலைமையிலான அரசு கொரோனா வைரசை முறையாக கையாளவில்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது.

ஜெயிர் போல்சனரோ ஜனாதிபதியாக பதவி ஏற்றது முதல் சுகாதார அமைச்சராக இருந்து வந்த லூயிஸ்ஹென்ரின் மாண்டெட்டா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக நெல்சன் டீச் புதிய சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால் இவரும் சில வாரங்களிலேயே தனது பதவியை இராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து இராணுவ ஜெனரல் எட்வர்டோ பசுவெல்லோ இடைக்கால சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் அந்த பதவிக்கு அவர் நிரந்தரமாக நியமிக்கப்பட்டார்.

மருத்துவத் துறையில் எந்த வித அனுபவம் இல்லாத இராணுவ ஜெனரலை சுகாதார அமைச்சராக நியமித்ததற்கு விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், பிரேசிலில் கொரோனா பரவ தொடங்கியதில் இருந்து 4-வது முறையாக சுகாதாரத் துறை அமைச்சர் மாற்றப்பட்டுள்ளார்.

பிரேசில் சுகாதாரத் துறைக்கு புதிய அமைச்சரை நியமித்துள்ளதாக ஜனாதிபதி ஜெயீர் போல்சனரோ அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், எட்வர்டோ பசுவெல்லோ சுகாதாரத் துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, டாக்டரும் இருதயவியல் சங்கத்தின் தலைவருமான மார்செலோ குயிரோகா புதிய சுகாதாரத் துறை அமைச்சராக நியமிக்கப்படுகிறார் என தெரிவித்தார்.

Related posts

கொவிட் – 19 : பரவும் வேகம் குறைவு

சிங்கப்பூர் பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

அரச குடும்ப பொறுப்பிலிருந்து விலகும் இளவரசர் ஹரி