அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டை ஆட்சி செய்ய முடியாவிட்டால் மீண்டும் ரணிலிடம் ஒப்படைத்து விட்டுச் செல்லுங்கள் – பிரேம்நாத் சி தொலவத்த

தேசிய மக்கள் சக்தியினருக்கு அனுபவம் இல்லை என நாம் தேர்தலுக்கு முன்னரே கூறினோம். தற்போது மக்கள் அதனை நடைமுறையில் காண்கின்றனர்.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி முறையாக ஆட்சி செய்ய முடியாவிட்டால் மீண்டும் நாட்டை ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைத்துச் செல்லுங்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்தார்.

கொழும்பில் இன்று புதன்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாமல் ராஜபக்ஷ மாத்திரமின்றி சகல எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் அச்சுறுத்தல் காணப்படுகிறது. அவர்களுக்கு தமது நிலைப்பாட்டுக்கமைய சுதந்திரமாக செயற்படுவதற்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டுள்ளது. ஆளுந்தரப்பு எவ்வாறான சதி செயல்களில் ஈடுபட்டாலும் நீதித்துறையின் மீது எமக்கு நம்பிக்கை இருக்கிறது.

எதிர்க்கட்சிகளை முற்றாக இல்லாதொழித்து கம்யூனிச ஆட்சியை தோற்றுவிப்பதே இவர்களது நோக்கமாகும். கைது செய்யப்படும் சந்தேகநபர்கள் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழக்கின்றனர்.

இவை தொடர்பில் மக்கள் தெளிவு பெற வேண்டும். இவ்வாறு சந்தேகநபர்கள் உயிரிழப்பது சிறந்தது என சிலர் எண்ணுகின்றனர். ஆனால் அது தவறாகும்.

நாட்டில் மரண தண்டனை கூட நிறைவேற்றப்படுவதில்லை. சிறைக்கைதிகளின் உரிமைகள் அரசியலமைப்பிலும் உள்வாங்கப்பட்டுள்ளன. அவ்வாறிருக்கையில் அவர்களை கொல்வதற்கு யாருக்கு என்ன உரிமையிருக்கிறது? சட்டமா அதிபர் திணைக்களம் சிறப்பாக செயற்பட்டு வருகின்ற நிலையிலும், அதற்கு இணையாக பிரிதொரு சட்ட நிறுவனத்தை நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தேசிய பாதுகாப்பு குறித்து எமக்கு கற்றுக் கொடுப்பதாகக் கூறியவர்களுக்கே தேசிய பாதுகாப்பு என்ன என்ற புரிதல் இல்லை. அதனால் தான் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பில்லை என்று கூறுகின்றனர். இந்த அழுத்தத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல அவரது சாரதியை கழுதை என திட்டினார்.

இவர்களுக்கு அனுபவம் இல்லை என்பதை நாம் தேர்தலுக்கு முன்னரே குறிப்பிட்டிருந்தோம். அதனை தற்போது மக்கள் நடைமுறையில் காண்கின்றனர்.

நாட்டை ஆட்சி செய்ய முடியாவிட்டால் மீண்டும் ரணிலிடம் ஒப்படைத்து விட்டுச் செல்லுங்கள் என்றார்.

-எம்.மனோசித்ரா

Related posts

சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

249 ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள்…

ஐ.தே.தேசியக் கட்சியின் வரவு செலவுத் திட்டம் சபையில் தோற்கடிப்பு