உள்நாடு

நாட்டைக் கட்டியெழுப்ப பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

(UTV | கொழும்பு) –

பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டை அபிவிருத்தியை நோக்கி அழைத்துச் செல்லும் வேலைத்திட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் முக்கிய பங்கு வகிக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

விவசாயம், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அபிவிருத்திக்காக பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்பை எதிர்பார்ப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, இந்த முயற்சிகளில் தீவிரமாக இணைந்துகொள்ளுமாறு பல்கலைக்கழக மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுடன் அண்மையில் யாழ்.ஜெட்விங் ஹோட்டலில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டின் அபிவிருத்திக்காக பல்கலைக்கழக சமூகத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னணி பங்களிப்பு குறித்து தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கும் வகையில் வடமாகாணத்தில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் குறித்து மாணவர்களுக்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி, இந்த நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு மாணவர்களை ஒன்றிணையுமாறும் கேட்டுக்கொண்டார்.

மனித வளமே ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு உந்து சக்தியாக அமைகின்றது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நவீன தொழில்நுட்பத்தை மையப்படுத்தி அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்குதல் உள்ளிட்ட உயர்கல்வித் துறையை விரிவுபடுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து இதன்போது மாணவர்களுக்கு தெளிவுபடுத்தினார்.

டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற துறைகளில் விரைவான முன்னேற்றத்தின் அவசியத்தையும் ஜனாதிபதி விளக்கினார்.

ஒரு நாடு என்ற ரீதியில் பிராந்திய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுகங்களை வலுவான துறைமுகங்களாக மாற்றுவதற்கான திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடினார்.தென்னிந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் வகையில் மன்னாரிலிருந்து இந்தியாவுக்கான நில ரீதியிலான தொடர்பை ஏற்படுத்துவது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தான் கலந்துரையாடியதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

2025 ஆம் ஆண்டளவில் 5% பொருளாதார வளர்ச்சியை அடைவதன் இலக்கையும் 2030 ஆம் ஆண்டளவில் படிப்படியாக அதனை 7-8% ஆக அதிகரிப்பதன் இலக்கு குறித்தும் விளக்கமளித்த ஜனாதிபதி, இலங்கை உயர் பொருளாதார வளர்ச்சி வீதத்தை விரைவில் அடைய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

வளமான மற்றும் அபிவிருத்தியடைந்த இலங்கையை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை மேலும் வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பல்கலைக்கழக மாணவர்களும் அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

இதன்போது மாணவர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் பதிலளித்ததுடன் அவற்றில் சில கேள்விகளும் ஜனாதிபதி வழங்கிய பதில்களும் கீழே தரப்படுகிறது.

கேள்வி:
ஒரு நாட்டின் வருமானத்திற்கு வரி வருமானம் முக்கிய காரணியாகும். நாங்கள் எங்கள் பல்கலைக்கழக ஆய்வுகளில் தொழில்முனைவோர் ஆலோசனைகள் மற்றும் தொழில்முனைவு பற்றி கற்கிறோம். ஆனால் ஜனாதிபதி அவர்களே, அது நடைமுறையில் செயல்படுத்தப்படுவதில்லை. எனவே, தொழில் முனைவோர் நடவடிக்கைகளுக்கான மாணவர்களின் ஆலோசனைகளை உள்ளடக்குவதற்கான நடவடிக்கைகளை மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பதில்:
அத்தகைய வட்டத்தை உங்கள் பீடத்தில் நிறுவி, எமது பொருளாதார விவகாரம் தொடர்பான குழுவுடன் நேரடியாக இணைய முடியும்.

கேள்வி:
ஜனாதிபதி அவர்களே, இத்திட்டம் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு ஊக்கமளித்தால், அது மிகவும் பொருத்தமானது என்பதைக் கூற வேண்டும்.

பதில்:

பல்கலைக்கழக மாணவர்களுக்கு குழுக்கள் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு திறைசேரிக்குச் சென்று அது எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து கற்கலாம்.

கேள்வி:
பல்கலைக்கழக மாணவர்கள் ஆங்கில மொழியில் தமது கல்வியைத் தொடர்வதில் பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். ஒரு சந்தர்ப்பத்தில், எமது பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழியில் கல்வி கற்க வேண்டியதன் காரணமாக தற்கொலைச் சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது. எனவே, அடிப்படை நிலையிலிருந்து மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்த ஏற்பாடு செய்ய முடியுமா?

பதில்:
கொழும்பு பல்கலைக்கழகத்தில் அவ்வாறான பிரச்சினை இல்லை என நான் நினைக்கிறேன். மொரட்டுவ பல்கலைக்கழகத்திலும் அவ்வாறானதொரு பிரச்சினை எழவில்லை. ஆனால் நீங்கள் அனைவரும் ஆங்கிலம் கற்க வேண்டும். ஆங்கிலம் ஒரு சர்வதேச மொழி. நீங்கள் செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பத்துடன் செயற்பட வேண்டுமென்றால் ஆங்கில அறிவு அவசியம். அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, இந்தியா உட்பட உலகின் பல நாடுகள் ஆங்கில மொழியில் பணிகளை மேற்கொள்கின்றன. எதிர்காலத்தில் சீனாவும் இந்த வழிமுறையைப் பின்பற்றும்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு (AI) பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில், பல்கலைக்கழக மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்துவது கட்டாயமாகியுள்ளது.

அதன்படி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மூலமாகவும் தேவைப்பட்டால், பிரிட்டிஜ் கவுன்சில் போன்ற நிறுவனங்கள் மூலம் அதற்கான வசதிகளை வழங்க நாம் எதிர்பார்க்கிறோம்.

கேள்வி:

ஜனாதிபதி அவர்களே, ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடிப்பதற்கு செலவழித்த காலத்தை விட, ஒரு அரச பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவன் பட்டப்படிப்பை முடிப்பதற்கான கல்வித் தகுதிகளைப் பெறச் செலவழிக்கும் காலம் மிக அதிகம். எனவே நாம் தொழில் சந்தைக்குச் செல்லும்போது, அவர்களுக்கு நம்மை விட அதிக அனுபவம் கிடைக்கிறது.. இதற்கு உங்கள் பரிந்துரை என்ன?

பதில்:
நான் ஒரு அரச பல்கலைக்கழகத்தில் படித்தேன். நான் 18 வயதில் பல்கலைக்கழக கல்வியைத் தொடங்கி 21 வயதில் பட்டம் பெற்றேன். 23 வயதில் வழக்கறிஞரானேன்.

இது பல்கலைக்கழகத்தின் உள்ளகப் பிரச்சினை. இன்று சிலர் பல்கலைக்கழக கல்வியை சீர்குலைத்து வருகின்றனர். ஆனால் நாங்கள் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது, முதல் தவணையின் கடைசி இரண்டு வாரங்கள் மட்டுமே வேலை நிறுத்தத்திற்கு ஒதுக்க உபவேந்தருடன் உடன்பாடு ஏற்படுத்திக் கொள்வோம். அவரும் அதற்கு உடன்பட்டார். அவ்வாறே நாமும் நடந்துகொண்டோம். எனவே, நாம் ஒரு முறைமையின் கீழ் செயல்படுவது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.

அத்துடன், மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்ட பின்னர், மூன்று அல்லது நான்கு வருடங்களுக்குள் கல்வியை நிறைவு செய்து பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற சட்டத்தை எதிர்காலத்தில் கொண்டு வர எதிர்பார்க்கின்றோம். மருத்துவ பீடங்களுக்கு அது தேவையில்லை.

கேள்வி:
ஜனாதிபதி அவர்களே , நான் ஒரு ஆலோசனை முன்வைக்கலாமா? பெரும்பாலும் அரசாங்க பாடசாலைகள் அனைத்தும் ஒரே நாளில் தொடங்கி ஒரே நாளில் தான் நிறைவடைகின்றன. ஏன் அரசாங்கப் பல்கலைக் கழகங்களால் அதைச் செய்ய முடியாது?

பதில்:
பல்கலைக்கழகங்களின் கல்வியாண்டு அக்டோபரில் தொடங்குகிறது. அது அடுத்த ஆண்டு செப்டம்பர் 30 இல் முடிவடைகிறது. நாங்கள் பல்கலைக்கழகத்தில் இருந்தபோதும், கல்வி ஆண்டு அக்டோபரில் தொடங்கியது. பல நாடுகளில், பல்கலைக்கழக கல்வியாண்டு அக்டோபர் முதல் செப்டம்பர் வரை செயற்படுத்தப்படுகிறது என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, வடமாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் விசேட திட்டப்பணிப்பாளர் திக்ஷன அபேவர்தன, ஜனாதிபதியின் தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, யாழ்.பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ். ஸ்ரீ சற்குணராஜா யாழ் பல்கலைக்கழக முன்னாள் உப வேந்தர் வசந்தி அரசரத்னம் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

         

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

திருமலை துறைமுகத்தில் இருந்து ‘சக்தி’ புறப்பட்டது

‘சூரியவெவயில் ஊட்டச்சத்து குறைபாடு கணக்கெடுப்பு பொய்’  

நாளை முதல் நாடளாவிய ரீதியில் முழுநேர நடமாட்ட கட்டுப்பாடு