தேசிய நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு மேம்பாட்டுக்கான சிறந்த செயற்பாட்டு திட்டங்கள் இந்த ஆண்டு இறுதி பகுதியில் செயற்படுத்தப்படும்.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய புதிய அரசியலமைப்பினை நிச்சயம் உருவாக்குவோம் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரசியல் தேவைகளை கருத்திற்கொண்டு அரசியலமைப்பை உருவாக்குவதாயின் அரசியலமைப்பு உருவாக்க பணிகளை ஒருமாத காலத்துக்குள் ஆரம்பித்து நிறைவு செய்யலாம்.
கடந்த காலங்களில் அவ்வாறான தன்மையே காணப்பட்டன. ஆட்சிக்கு வரும் அரசாங்கம் தமது தேவைக்காக அரசியலமைப்பினை திருத்தம் செய்தது.
அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தம் அதற்கு சிறந்த உதாரணமாகும்.
1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாம் குடியரசு யாப்பு இதுவரையில் 21 சீர்த்திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
மக்களின் அனுமதியுடனும், அபிலாசையுடனும் ஒரு திருத்தம் கூட மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாகவே அரச நிர்வாக கட்டமைப்பு பலவீனமடைந்தது. அரசியலமைப்பு மீதான மக்களின் நம்பிக்கையும் சிதைவடைந்துள்ளது.
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்த பணிகளை தொடர்வதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்துள்ளோம்.
இந்த வாக்குறுதியில் எவ்வித மாற்றமும் கிடையாது. புதிய யாப்பு உருவாக்கத்துக்கான பணிகளை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. என்று ஒரு தரப்பினர் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
நாட்டு மக்களின் அபிலாசையுடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும். நாட்டு மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் புதிய யாப்பு உருவாக்கப்படும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது .
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சிப் பெறுவதற்கான நடவடிக்கைகளுக்கு தற்போது முன்னுரிமை வழங்க வேண்டியுள்ளது.
நாட்டில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள், சட்டவாட்சியை செயற்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. சட்டத்தின் முன்னிலையில் எவருக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படமாட்டாது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரசியலமைப்புக்கு அப்பாற்பட்ட வகையில் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் உள்ளன.
இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதற்கு ஜனாதிபதி வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுகிறார்.
அத்துடன் பல ஆண்டுகாலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த வழக்குகள் தற்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்போம் என்றார்.
-இராஜதுரை ஹஷான்