உள்நாடு

நாட்டில் நிரந்தர வரிக் கொள்கை இன்மையால் கைத்தொழிலாளர்கள் பாதிப்பு!

(UTV | கொழும்பு) –

நாட்டில்  குறிப்பிட்ட நிரந்தர வரிக் கொள்கை இல்லாமை முதலீட்டாளர்கள் மற்றும் கைத்தொழிலாளர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள். நிதி குழு முன்வைத்த பரிந்துரைகளை செயற்படுத்தாத அரச நிறுவனங்களை குழுவுக்கு மீண்டும் அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என  அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற  அரசாங்க நிதி பற்றிய குழுவில் வர்த்தமானி அறிவித்தல்களில் பிரசுரிக்கப்பட்ட மூன்று கட்டளைகள் ஆராயப்பட்டபோதே குழுவின் தலைவர் இதனைத் தெரிவித்தார். 1962 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க அரசிறைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2336-72 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது. சவர்க்கார உற்பத்திக்காக இந்நாட்டுக்கு ‘சோப் நூடில்ஸ்’ இறக்குமதி செய்யப்படுவதாகவும், மேலும் ஒரு சில நிறுவனங்களே பாம் எண்ணெயின் கொழும்பு அமிலங்கள் இறக்குமதி செய்யப்பட்டு சோப் நூடில்ஸ் உற்பத்தி செய்து வருவதும் இங்கு தெரியவந்தது.

இருந்தபோதும் இந்நாட்டுக்கு பாம் ஒயில் அமில இறக்குமதியின்போது 24 சதவீதம் புதிய சுங்க வரி அறவிடப்படுவதால் ஒரு சில சவர்க்கார உற்பத்தி நிறுவனங்கள் மாத்திரம் பாம் எண்ணெய் அமிலத்துக்குப் பதிலாக தற்பொழுது குறைந்த வரிப் பெறுமானத்தைக் கொண்ட பாமிடிக் அல்லது லொரிக் ஆகிய அமிலங்களை மாற்றாக இறக்குமதி செய்து சோப் நூடில்ஸ் உற்பத்தி செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்வாறான நிலையில் கைத்தொழில் அமைச்சின் பரிந்துரைக்கு அமைய சந்தையில் விலை சமநிலையைப் பேணுவதற்கு அரசாங்கத்தின் வரி வருமானம் இழக்கப்படுவதைத் தடுப்பதற்கும் இந்த மாற்று அமிலங்களுக்கு 29 சதவீதம் புதிய வரி இந்தக் கட்டளையின் மூலம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த அமில வகைகள் இறப்பர் தொழில்துறைக்குப் பயன்படுத்தப்படுவதாகவும் சவர்க்கார உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் அமிலங்களுக்கு தனியான எச்எஸ் ‘குறியீடுகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

ஓரிரு நிறுவனங்களை இலக்கு வைத்து அவர்கள் தொழில்நுட்பத்தின் மீது முதலீடு செய்திருக்கும் சூழ்நிலையில் இவ்வாறு வரி அறிவீடு செய்வது எந்தளவுக்கு நியாயமானது என்றும் குழு சுட்டிக்காட்டியது. இந்தத் தொழில்துறையின் தொழில்நுட்ப வினைத்திறனுக்கு வரி அறவிடுவது தொடர்பில் இங்கு நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது. இந்நாட்டில் குறிப்பிட்ட நிரந்தர வரிக்கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் இங்கு வலியுறுத்தப்பட்டது. எனவே, இந்தப் புதிய வரி விதிப்பின் அடிப்படை மற்றும் குறிப்பிட்ட நோக்கங்கள் அவற்றினால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து எதிர்வரும் 22ம் திகதிக்குள் அறிக்கை அளிக்குமாறும் அரசாங்க நிதி பற்றிய குழு, நிதி மற்றும் கைத்தொழில் அமைச்சின் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தது.

1962 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க அரசிறைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2341- 64 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. 2021ஆம் ஆண்டு இலங்கையில் அச்சுத் தொழிலுக்கான மை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களுக்கு 15 சதவீத சுங்க வரி விதிக்கப்பட்டதன் காரணமாக இலங்கையில் மை இறக்குமதி செய்யும் செலவை விட உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் போட்டிக்கு ஏற்ற விலையை தக்கவைக்க முடியாது என்ற உண்மையை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதன்படி, உள்ளூரில் அச்சுக்கான மை தயாரிப்பாளர்களைப் பாதுகாக்கும் வகையில் இந்த வரியை 5 சதவீத  ஆக குறைத்து இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டது. இதனால் அரசு இழக்கும் வரி எவ்வளவு எனக் குழு கேள்வியெழுப்பியது.

அதன்படி, 1.5 சதவீத வருமானம் அதாவது ரூ. 4.5 இலட்சம் வருவாய் இழப்பு ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். வரித் தொகையில் இவ்வளவு சிறிய மாற்றத்திற்காக வரிக் கொள்கையின் ஸ்திரத்தன்மையை மாற்றுவது எவ்வளவு நியாயம் என்று குழு கேள்வி எழுப்பியுள்ளது. எனினும் அதற்கான அனுமதி வழங்கப்பட்டது.உற்பத்தி மூலப்பொருட்களுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கக் கடந்த வரவுசெலவுத்திட்ட தீர்மானத்தின் அடிப்படையில் செயற்படுவதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். கைத்தொழில் அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமைவாக உள்ளூர் கைத்தொழில்துறையினரை நல்லெண்ண அடிப்படையில் பாதுகாக்கும் வகையில் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் சில சமயங்களில் ஒரு சில வர்த்தகர்களே பெரும் இலாபம் ஈட்டுவதால் நுகர்வோருக்கு நன்மைகள் கிடைப்பதில்லை எனவும் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

சுங்க கட்டளைச் சட்டத்தின் 107(அ) பிரிவின் கீழ் வெளியிடப்பட்ட 2329-46 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டன. வெளிநாட்டிலுள்ள தொழிலாளர்கள் சட்டரீதியான வழிகளின் மூலம் பணம் அனுப்புவதை ஊக்குவிப்பதற்காக அவர்கள் நாடு திரும்பியவுடன் விமான நிலையத்தில் உள்ள வரியில்லா வணிக வளாகத்தில் வாங்கப்பட்ட பொருட்களுக்கு அவர்கள் அனுப்பிய அந்நியச் செலாவணியின் தொகையின் அடிப்படையில் மேலதிக தீர்வையற்ற கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் பரிந்துரையின் பெயரில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன் கைத்தொலைபேசி செயலியும் பயன்படுத்தப்படும் என அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் நோக்கம் நல்லதாக இருந்தாலும் குறைந்த வருமானம் உள்ள நபருடன் ஒப்பிடும்போது அதிக வருமானம் உள்ள ஒருவருக்கு வரிச் சலுகையில் பெரிய வித்தியாசம் இருப்பதாக குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். எனவே, இவ்விடயத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு குழு அறிவுறுத்தியது.அரசாங்க நிதி பற்றிய குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னேற்றம் குறித்து பின்தொடர்வதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அதன்படி, உரிய காலக்கெடுவில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாத நிறுவனங்கள் மற்றும் தரப்பினரைக் குழுவின் முன் அழைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாளையும் மின்வெட்டு

இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் பச்சை ஆப்பிள் அறுவடை ஜனாதிபதிக்கு

கொவிட்-19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 48 மில்லியன் ரூபா அன்பளிப்பு