ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்களுக்கு இடையேயான சம்பவங்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையே நீண்டகாலமாக நிலவி வந்துள்ள மோதல்களின் விளைவாகவே இந்தக் கொலைகள் இடம்பெற்றுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தனிப்பட்ட தகராறுகளால் ஏற்பட்டுள்ள சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.
தனிப்பட்ட தகராறு சம்பவங்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதக்கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் தேசிய பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்துள்ளது என்றும் அமைச்சர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தேசிய பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகக் கூறி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (20) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் ஆனந்த விஜேபால இதனைத் தெரிவித்தார்.