நாட்டின் தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தலில் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பிற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் எங்கும் சுதந்திரமாகப் பயணிக்க முடியும் எனவும் அரசாங்கம் தெரிவித்தது.
இவ்வாறு அரசாங்கம் குறிப்பிட்டு ஓரிரு நாட்களில் கொலைச் சம்பவங்களே அரங்கேறியுள்ளன என நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பத்தை சுட்டிக்காட்டி நாமல் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றியிருந்தார்.
மேலும் இன்றைய தினம் நீதிமன்றத்திற்குள் நீதிபதியின் முன்பே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.
உயிரிழந்தவரின் நடத்தை எவ்வாறு இருப்பினும் நீதிமன்றத்திற்குள் இவ்வாறான அசம்பாவிதங்கள் அரங்கேறுவது பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கும் செயற்பாடு என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இதேபோல் அண்மையில் மன்னார் நீதிமன்றத்துக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தையும் நினைவுபடுத்தியிருந்தார்.
இவ்வாறான சூழலில் எவ்வாறு நாட்டிற்கு முதலீட்டாளர்களை அரசாங்கம் அழைக்க முடியும் எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாட்டிலே முதலீடுகளை முன்னெடுத்த முதலீட்டாளர்களும் இடைநடுவே திட்டங்களைக் கைவிட்டுச் சென்றுள்ளதாகவும் நாமல் எம்.பி சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான கொலைச் சம்பவங்கள் அரங்கேறுவது நாட்டின் சுற்றுலாத்துறையையும் பாதிக்கும் எனக் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் அச்சாறு போன்று உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
இதேவேளை தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை என்றும் எனவே பாதீட்டில் முன்வைத்த விடயங்களையாவது அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
வீடியோ