அரசியல்உள்நாடு

நாட்டின் ஏற்றுமதித் தொழில்களை அமெரிக்க வரியிலிருந்து பாதுகாக்க சஜித் பிரேமதாச பல யோசனைகளை முன்வைத்தார்

ஐக்கிய அமெரிக்க குடியரசு அரசினால் நமது நாட்டின் மீது விதித்துள்ள வரிகளால் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் கலந்துரையாட ஒன்றிணைந்த ஆடை சங்கங்கள் மன்றத்தினர் (JAAF) இன்று என்னைச் சந்தித்தனர்.

இதன்போது ​​ஒரு நாடாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடினோம். ஆடைத் தொழில்துறையுடன் சம்பந்தபட்ட 350,000 க்கும் மேற்பட்ட நேரடி வேலைவாய்ப்புகளை இது தருவதோடு, ஒரு மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கின்றது. இந்த வரி விதிப்பால் இத்துறைக்கு பெரும் பாதகம் ஏற்படலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இலங்கை ஒன்றிணைந்த ஆடை சங்கங்கள் மன்றத்தினரோடு (JAAF) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (05) நடந்த சந்திப்பின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

நிபுணத்துவம் வாய்ந்த தூதுக்குழுவை உடனடியாக அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இந்நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க, நிபுணத்துவ துறைசார் அறிவு கொண்ட குழுவொன்றை அமெரிக்காவுக்கு அனுப்பி, விரிவான கலந்துரையாடலை முன்னெடுத்து, நமது நாட்டின் கொள்கை ரீதியான பதிலை முறையாக முன்வைத்து ஏற்றுமதியைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இங்கு கவர்ச்சிகரமான பிரேரணைகளை முன்வைக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஆசிய பிராந்திய நாடுகளுடன் சேர்ந்து பொதுவான இணக்கப்பாட்டை எட்டிக்கொள்ள வேண்டும்.

இந்த சூழ்நிலையை எதிர்கொள்ளும் ஆசிய பிராந்திய நாடுகளுடன் சேர்ந்து கொண்டு, உலக வர்த்தக ஸ்தாபனத்துடனும் இணைந்து நாம் ஒரு கூட்டு திட்டத்திற்கு செல்ல வேண்டும். அதுமட்டுமின்றி இது தொடர்பாக நாட்டில் அரசியல் வேறுபாடுகள் இன்றி பொதுவான கொள்கையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதுடன், தேசிய மட்டத்திலும் ஒருமித்த கருத்தையும் எட்டிக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஸ்மார்டான உள்ளக பொறிமுறையொன்றை தாபிக்கவும்.

வர்த்தகம் என்ற பரப்பின் கீழ் ஒரு உள்ளக பொறிமுறையை நிறுவி, சர்வதேச வர்த்தக உறவுகள் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு தொடர்பான தனித் தனியான அரசாங்க நிறுவனங்களை தாபித்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அமெரிக்காவில் இத்தகைய நிறுவனங்களும் அதிகாரிகளும் இருப்பதால், நமது நாட்டிற்கும் இவ்வாறான ஒழுங்குகள் தேவை. மேலும் நாட்டிற்கு ஒப்பீட்டு ரீதியாக நன்மைகளைப் பெற்றுத் தரும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளுக்கும் நாம் செல்ல வேண்டும்.

அந்நிய நேரடி முதலீட்டுக்கான தடைகளை நீக்கி, காலாவதியான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளில் இருந்து விடுபட்டு, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் மையமாக இலங்கையை மாற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

பெறுமானம் சேர்க்கும் விதமாக ஏற்றுமதியில் பல்வகைப்படுத்தலுக்கு செல்லவும்.

நமது நாட்டின் ஏற்றுமதி வரைபடைத்தை வரையறுக்கப்பட்ட நாடுகளுக்கு மட்டுப்படுத்தாமல், அதனை விரிவுபடுத்தி, புதிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாட்டின் ஏற்றுமதிக்கு கூடிய பெறுமதியைச் சேர்த்து, அதன் ஊடாக ஏற்றுமதியை மேலும் கவர்ச்சிகரமான முறையில் விரிவுபடுத்த முடியும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஆணவத்தை விட்டொழியுங்கள். விசேட நிதியமொன்று தாபியுங்கள்.

ஏற்றுமதிகள் பசுமையை மையமாகக் கொண்டதாக அமைந்திருக்க வேண்டும். இத்தகைய அவசரகால சூழ்நிலைகளில் ஏற்றுமதித் தொழில் பாரபட்சத்திற்கு ஆளாகும் போது, அதைப் பாதுகாக்க விசேட நிதியமொன்று தாபிக்கப்பட வேண்டும். ஒரு குழுவை நியமித்து இதனை கையாள முடியாது.

ஆணவத்தை விடுத்து, அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

Related posts

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தில் திருத்தம்

‘கெசல்வத்த ஃபவாஸ்’ கொலை

மேலும் 10 பேர் பூரணமாக குணம்