உள்நாடு

நாடு திரும்பியுள்ள பஷிலிற்கும் , ஜனாதிபதியிற்கும் இடையில் பேச்சுவார்த்தை

விடுமுறைக்காக நாடு திரும்பியுள்ள பஷில் ராஜபக்ஷவுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது.

எவ்வாறு ஜனாதிபதித் தேர்தலை காலம் தாழ்த்தி, பொதுத் தேர்தலை முன்னரே நடத்தலாம் என்பது தொடர்பில் இவர்கள் திட்டமிட்டிருக்கக் கூடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.

 

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 

விடுமுறைக்காக நாடு திரும்பியுள்ள பஷில் ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். ரணில் – ராஜபக்ஷ அரசாங்கத்தை எவ்வாறு தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது என்பது தொடர்பிலேயே இவர்கள் பேசியுள்ளனர்.

 

மக்களே தவறிழைத்தனர் என்றும், அதற்கு அவர்களே பொறுப்பு கூற வேண்டும் என்றும் பஷில் ராஜபக்ஷ தொடர்ந்தும் கூறிவந்தார். எதிர்காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவும் இதனையே கூறுவார். தற்போது பாராளுமன்றத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும் என்று பஷில் தெரிவித்துள்ளார். ஆனால் அரசியலமைப்பின் படி ஜனாதிபதித் தேர்தலே முதலில் இடம்பெற வேண்டும்.

எவ்வாறிருப்பினும் எந்த தேர்தலுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவே உள்ளது. பொதுஜன பெரமுனவும், ஐ.தே.க.வும் இணைந்தால் மாத்திரமே அவர்களால் பாராளுமன்றத்தில் ஓரளவேனும் ஆசனங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். முன்னர் மறைமுகமாக செய்தவற்றை இன்று பகிரங்கமாக செய்கின்றனர்.

பாராளுமன்றத்தில் 134 பேர் வாக்களித்து ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கினர். ஆனால் இன்று அவர்கள் இந்த அரசாங்கம் எம்முடையதல்ல என்கின்றனர். ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கிவிட்டு அவர்களால் இவ்வாறு பொறுப்புக்கூறலிலிருந்து விலக முடியாது.

மக்கள் ஆணைக்கு முக்கியத்துவமளிக்க வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளது. எனவே செலவுகளைக் குறைப்பதற்காக ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகிய இரண்டையும் ஒரே தினத்தில் நடத்தினால் கூட அதற்கு எவரும் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை என்றார்.

Related posts

நேபாளத்திலிருந்து இலங்கை வந்த 93 மாணவர்கள்

ரணிலை பாராட்டிய ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யோகோ!

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 1,611 பேர் கைது