அரசியல்உள்நாடு

நாங்கள் நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்புவோம் – ஜனாதிபதி அநுர

‘நாங்கள் நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்புவோம். தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமாயின், கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். ஆகவே அதற்காக உள்ளூராட்சிமன்றங்களின் அதிகாரத்தை மக்கள் எமக்கு வழங்க வேண்டும்’ என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

மொனராகலை மாவட்டத்திலுள்ள புத்தல பகுதியில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:

“பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான உரிய திட்டங்களை செயற்படுத்தியுள்ளோம். 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு காலப்பகுதிகளின் நிலைமை இனியொருபோதும் ஏற்படாது. இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும்.

அதற்கான முன்மொழிவுகள் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் பெற்றுக்கொள்ளப்படும். அதற்கென மாவட்ட மட்டத்திலான தேவைகள் கோரப்படும்.

ஊழல்வாதிகளை நீதிமன்றமே தண்டிக்கும். இன்னும் ஓரிரு மாதங்களில் பல சிறந்த செய்திகளை மக்கள் அறிந்து கொள்வார்கள். கடந்தகால அரசாங்கங்களின் ஊழல் மோசடிகள் தொடர்பான அறிக்கைகள் தொடர்ச்சியாக கிடைக்கப் பெறுகின்றன.

அண்மையில் ஒரு அறிக்கை கிடைத்துள்ளது. அதனை இன்னும் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவில்லை. மே 09 சம்பவத்தின் போது தனமன்வில பகுதியில் வீடொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

வீட்டின் உரிமையாளரோ, காணியின் உரிமையாளரோ இழப்பீடு பெற்றுக் கொள்ளவில்லை. இழப்பீட்டினை ராஜபக்ஷர்களில் ஒருவர் பெற்றுக் கொள்வார். இந்த விடயம் வெகுவிரைவில் வெளிவரும்.

அரசியல் பலம், ஊடக பலம் ஆகியன எமக்கு எதிரான இருந்த போது மக்கள் பலத்துடன் ஆட்சியமைத்துள்ளோம்.ஆகவே எமது ஆட்சியை வீழ்த்த முடியாது. வீழ்த்தவும் யாருமில்லை. நாட்டைக் கட்டியெழுப்பியதன் பின்னரே எமது பயணத்தை பின்னோக்கிப் பார்ப்போம்.

நிறைவடைந்துள்ள ஆறுமாத காலப்பகுதியில் எந்த அரசாங்கங்களும் செய்யாத பல விடயங்களை நாட்டுக்காக நாங்கள் செயற்படுத்தியுள்ளோம். பொருளாதார நெருக்கடியினால் இடைநிறுத்தப்பட்டிருந்த வெளிநாட்டு முதலீடுகளுடனான அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட அபிவிருத்திகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை முறையாக பயன்படுத்த வேண்டும். இல்லையேல் அந்த நிதியை திறைசேரிக்கு அனுப்ப வேண்டும். அத்துடன் நிதியைப் பயன்படுத்தாமைக்கான காரணத்தையும் குறிப்பிட வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவை இரத்து செய்வோம். தற்போது வழங்கப்படும் 10 இலட்சம் ரூபா காப்புறுதி கொடுப்பனவை 2,50,000 ரூபாவாக வரையறுப்போம்.

வாகன அனுமதிப்பத்திரம் எதுவும் வழங்க போவதில்லை.அமைச்சரவை அமைச்சர்களின் கொடுப்பனவு மற்றும் சலுகைகளை வரையறுத்து அரச செலவுகளைக் குறைப்போம்.

பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படும் ஓய்வூதியக் கொடுப்பனவு எனக்கு வேண்டாம் என்று பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு எழுத்துமூலமாக அறிவித்துள்ளேன்.

நாட்டைக் கட்டியெழுப்பும் பணிகளை எம்மில் இருந்து ஆரம்பித்துள்ளோம். ஆகவே அரச சேவையாளர்கள் மக்களுக்காக வினைத்திறனுடன் செயற்பட வேண்டும்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். எதிர்வரும் ஜீன் மாதம் 4 இலட்சம் குடும்பங்களுக்கு முதல் பட்டியலுக்கு அமைய அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படும்.

விவசாயத் துறையை மேம்படுத்துவதற்காக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பொருளாதார பாதிப்பு என்று கூறிக் கொண்டு எந்நாளும் இருக்க முடியாது. 2028 ஆம் ஆண்டு வெளிநாட்டுக் கடன்களை மீளச்செலுத்த வேண்டும். தேசிய உற்பத்திகளை சிறந்த முறையில் மேம்படுத்திக் கொண்டால், இறக்குமதிச் செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.

தேசிய உற்பத்தி மேம்பாட்டுக்காக வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் 25 ஆயிரம் ஹெக்டயர் நிலப்பரப்பில் தெங்கு பயிர்ச்செய்கைக்கு 5000 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. சீனி இறக்குமதிக்கு அதிகளவில் டொலர் செலவிடப்படுகிறது. செவலனல, பெலவத்த, ஹிங்குரான சீனித் தொழிற்சாலைகள் துரிதமாக அபிவிருத்தி செய்யப்படும்.

காலத்தை இழுத்தடித்துக் கொண்டிருக்க முடியாது என்பதற்காகவே ஜுலை மாதம் 2 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளை ஸ்தாபிக்க வேண்டும் என்று வர்த்தமானியில் அறிவித்துள்ளோம்.

ஊழல் மோசடியாளர்களை தண்டிக்கும் அதிகாரம் அரசாங்கத்துக்குக் கிடையாது. முறையான விசாரணைகளுக்குரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்போம். நீதிமன்றமே அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய ஊழல் மோசடிகளுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அனைவருக்கும் சட்டம் பொதுவானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளேன்”.

இவ்வாறு ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்தார்.

Related posts

பொரளை பகுதியில் ஒருவர் கூறிய ஆயுதங்களால் வெட்டி கொலை

அலி சப்ரியின் உறுப்புரிமை தொடர்பில் இன்று தீர்மானம் – சபாநாயகர்

தடை தாண்டல் சம்பியனான மதுஷானி தற்கொலை