(UTV | பாரிஸ்) – பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் பத்திரிகையாளர்களை சந்திக்க மறுத்த நவோமி ஒசாகாவுக்கு ரூ.10 லட்சத்து 86 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டியில் விளையாடிய ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா வெற்றி பெற்றார்.
இதன்பின் பத்திரிகையாளர்களை சந்திக்க அவர் மறுத்து விட்டார். இதற்காக போட்டி நடுவர் அவருக்கு ரூ.10 லட்சத்து 86 ஆயிரம் அபராதம் விதித்துள்ளார். தொடர்ந்து இதுபோன்று அவர் நடந்து கொண்டால் அவர் மீது கூடுதல் தடை விதிக்க வேண்டி வரும் என நடுவர் கூறியுள்ளார்.
ஒசாகா கடந்த வாரம் கூறும்பொழுது, பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின்போது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்ளமாட்டேன். மனநலம் தொடர்ந்து நன்றாக இருப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளேன் என அவர் கூறினார்.
எனினும், பிரெஞ்சு ஓபன் போட்டி நிர்வாகிகள் சார்பில் வெளியான அறிக்கையில், கிராண்ட்ஸ்லாம் பட்ட போட்டிகளுக்கான நடத்தை விதிகளின் கீழ், போட்டியில் வெற்றி, தோல்வி என முடிவு எதுவாக இருப்பினும், டென்னிஸ் விளையாட்டின் நலன், ரசிகர்கள் மற்றும் போட்டியில் கலந்து கொள்வோர் நலனுக்காக ஊடகக்காரர்களிடம் பேச வேண்டியது வீரர், வீராங்கனைகளின் கடமை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.