உலகம்

நவால்னி சிறைச்சாலை மருத்துவமனைக்கு

(UTV |  ரஷ்யா) – ரஷ்யாவில் ஜனாதிபதி புதினையும், அவரது அரசையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் அந்த நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி. கடந்த ஆண்டு இவரை கொலை செய்யும் நோக்கில் விமான நிலையத்தில் அவர் குடித்த டீயில் நோவிசோக் என்று இரசாயன நஞ்சை கலந்து கொடுத்ததில் அவர் கிட்டத்தட்ட இறக்கும் நிலைக்கு சென்றார். இந்த சதியின் பின்னணியில் ஜனாதிபதி புதினின் அரசு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனை தொடர்ந்து இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக ஒன்று திரண்டன.

இதற்கிடையில் நவால்னிக்கு நஞ்சு செலுத்தப்பட்ட பின்னணியில் ரஷ்ய அரசாங்கம் இருப்பதாக அமெரிக்க உளவுப்பிரிவு ஆய்வு செய்து முடிவுக்கு வந்தது. அதன் பிறகு மூத்த ரஷ்ய அரசு அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. இதற்கிடையில் ரசாயன தாக்குதலுக்கு ஆளான நவால்னி ஜெர்மனியில் சிகிச்சை பெற்று கடந்த ஜனவரி மாதம் 17-ம் திகதி மீண்டும் ரஷ்யா திரும்பியபோது விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார்.

பழைய பண மோசடி வழக்கில் அவரை கைது செய்ததாக ரஷ்ய பொலிசார் கூறிய நிலையில், இந்த வழக்கில் அவருக்கு 2½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த பிப்ரவரி மாதம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதனிடையே சிறையில் வலது கால் மரத்துப்போய், முதுகுவலியால் அவதிப்படும் நவால்னிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் தனது மருத்துவர்களைப் பார்க்க அனுமதிக்க கோரி கடந்த மாதம் 31-ம் தேதி முதல் சிறையில் நவால்னி உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனால் அவரது உடலில் பொட்டாசியத்தின் அளவு தீவிரமாக அதிகரித்துள்ளதாகவும், இதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் எந்த நேரத்திலும் அவர் உயிரிழக்க கூடும் என்றும் அவரது டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆனால் ரஷ்யா இதை மறுக்கிறது. கவனம் பெறுவதற்காக நவால்னி இப்படி நடந்து கொள்வதாக அந்த நாட்டு அரசு குற்றம் சாட்டுகிறது. இதனிடையே இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளும் ஐரோப்பிய கூட்டமைப்பும் நவால்னி நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கவலை தெரிவித்துள்ளன. சிறையில் நவால்னி உயிரிழந்தால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்யாவுக்கு அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், அலெக்சி நவால்னியின் உடல்நிலை மோசமடைந்ததால், அவா் மற்றொரு சிறையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா்.

இதுதொடா்பாக அவரின் வழக்கறிஞர் கூறுகையில், அலெக்சி நவால்னி நேற்று முன்தினம் உடல்நலமின்றி காணப்பட்டாா். இதையடுத்து அவரிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதனைத் தொடா்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. அவரின் உடல்நிலை நேற்று மாலை மோசமடைந்தது. இதையடுத்து அவா் மாஸ்கோவில் இருந்து 180 கி.மீ. தொலைவில் உள்ள விளாதிமீா் சிறை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்’ என தெரிவித்தார்.

Related posts

ஜப்பான் பிரதமர் பதவி விலகத் தயார்

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு

வீடுகளிலிருந்து பணிபுரியும் முறைமை நீக்கம்