(UDHAYAM, COLOMBO) – நல்லிணக்கத்தை பலப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கொண்டுவரும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை என சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி விவியன் பாலகிருஷ்னன் தெரிவித்தார்.
ஜனாதிபதிசெயலகத்தில் இன்று (18) ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். நாளை யாழ்ப்பாண நூலகத்திற்கு விஜயம் செய்து யாழ் நூலகத்திற்கு நூல்களை அன்பளிப்பு செய்யவுள்ளதாகவும் நூலக ஊழியர்களுக்கு பயிற்சி வசதிகளை வழங்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். யாழ்ப்பாண வைத்தியசாலையின் எலும்பு இயல் பிரிவுக்கு சிங்கப்பூர் உதவவுள்ளதாகவும் அவர் கூறினார்.
சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையே நீண்டகாலமாக இருந்துவரும் இருதரப்பு உறவுகளை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, யாழ்ப்பாண நூலகத்திற்கும் வைத்தியசாலைக்கும் சிங்கப்பூர் வழங்கும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார். இலங்கையில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் சர்வதேச மன்றங்களில் சிங்கப்பூர் இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.
இலங்கையில் சிங்கப்பூர் முதலீடுகளை அதிகரிப்பதற்கான நல்ல வாய்ப்புகள் உள்ளதாக கலாநிதி பாலகிருஷ்னன் தெரிவித்தார். சுற்றுலா மற்றும் உபசரிப்பு துறைகளில் சிங்கப்பூர் முதலீட்டார்களுக்கு நல்ல முதலீட்டு வாய்ப்புகள் உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கையில் ஏற்கனவே 300க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் முதலீடுகள் உள்ளதாக குறிப்பிட்ட சிங்கப்பூர் வெளிநாட்டமைச்சர், சக்திவளம், நீர், கல்வி மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளிலும் சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் முதலீடுகளை செய்யும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்தார்.
இலங்கையின் சர்வதேச உறவுகள் தொடர்பில் பாராட்டுக்களைத் தெரிவித்த கலாநிதி பாலகிருஷ்னன், பலம்பொருந்திய அயல்நாடுகளுக்கு பக்கத்தில் உள்ள சிறிய நாடுகள் என்ற வகையில் சிங்கப்பூர் மற்றும் இலங்கை போன்ற நாடுகள் வெளி உறவுகள் மற்றும் வலுச் சமநிலையில் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ, வெளிவிவகார செயலாளர் எசல வீரகோன், சிங்கப்பூர் உயர் ஸ்தானிகர் எஸ்.சந்திரதாஸ் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.