உலகம்

தொடர்ந்தும் பலஸ்தீனை குறிவைக்கும் ஜெருசலேம்

(UTV | கொழும்பு) – இஸ்ரேலிய காவல்துறையினருடன் பலஸ்தீனர்கள் தொடர்ந்து மூன்றாவது இரவாக மோதலில் ஈடுபட்டனர். இதுமட்டுமல்லாது திங்கள் கிழமையின் பிற்பகுதியில் யூத தேசியவாத அணிவகுப்பு ஒன்று ஜெருசலேம் நகரில் நடைபெற உள்ளதால் வன்முறைச் சம்பவங்கள் இன்னும் கூடுதலாக நிகழக் கூடும் என அச்சம் நிலவுகிறது.

ஜெருசலேமில் உள்ள ஷைக் ஜாரா மாவட்டத்தில், யூத குடியேறிகள் தங்களுடையது என்று கூறும் நிலத்தில் இருந்து பாலத்தீன குடும்பங்கள் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதை தொடர்ந்து அங்கு சமீப நாட்களாக பதற்றம் அதிகரித்து வருகிறது.

ஆண்டுதோறும் ஜெருசலேமில் நடக்கும் ஜெருசலேம் தின கொடி அணிவகுப்பில் போது இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகள் வழியாக ஜியனிச (zionism) கொள்கையுடைய யூதர்கள் செல்வார்கள்.

1967ஆம் ஆண்டு ஜெருசலேம் பழைய நகரம் அமைந்துள்ள கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியதைக் கொண்டாடும் நிகழ்வாக இந்த அணிவகுப்பு நடைபெறுகிறது.
இது தங்களை வேண்டுமென்றே தூண்டிவிடும் செயல் என்று பாலத்தீன தரப்பு கருதுகிறது.
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் மூத்த அதிகாரியான அமோஸ் கிலாட், இந்தக் கொடி அணிவகுப்பு ரத்து செய்யப்பட வேண்டும் அல்லது வேறு பாதை வழியாகச் செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல் சம்பவங்களில் காயமடைந்துள்ளதாக பாலத்தில் மருத்துவ அதிகாரிகள் மற்றும் இஸ்ரேலிய காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பாலத்தீன குடும்பங்கள் – யூத குடியேறிகள் பாலத்தீன குடும்பங்கள் அவர்கள் இடத்தில் இருந்து வெளியேற்றப்படுவது தொடர்பான வழக்கு ஒன்றும் திங்களன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருந்தது.

யூத குடியேறிகளுக்கு ஆதரவாக தங்களது சொந்த இடத்திலிருந்து பாலத்தீன குடும்பத்தினர் வெளியேற்றப்படுவதை, எதிர்த்து 70க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் தொடர்ந்த இந்த வழக்கு பல்லாண்டு காலமாக நடைபெற்று வருகிறது.

ஆனால் திங்களன்று இஸ்ரேலிய அரசின் தலைமை கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. அடுத்த முப்பது நாட்களில் புதிய தேதி முடிவு செய்யப்படும்.

ஞாயிறு இரவு ஷைக் ஜாரா அருகே நடந்த மோதல் சம்பவங்களின் போது பாலத்தீன தரப்பினர் இஸ்ரேலிய போலீசாரை நோக்கி கற்களை எறிந்தனர். இஸ்ரேலிய போலீசாரும் பாலத்தீன போராட்டக்காரர்களை எதிர்த்து தண்ணீரை பீய்ச்சி அடித்ததுடன், ‘ஸ்டன் கிரனேடுகளையும்’ வீசினர்.

ஜெருசலேம் பழைய நகர் அருகே உள்ள டமஸ்கஸ் கேட் பகுதி அருகிலும் மோதல்கள் நிகழ்ந்தன. இஸ்ரேலின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஹைபா நகரத்திலும் மேற்கு கரையில் உள்ள அருகே உள்ள ரமலான் நகரத்திலும் பாலத்தீன போராட்டக்காரர்கள் மற்றும் இஸ்ரேலிய காவல்துறையினர் இடையே மோதல் நடந்தது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிறன்று பாலஸ்தீன போராட்டக்காரர்களுக்கு எதிராக இஸ்ரேல் காவல்துறை மேற்கொண்ட எதிர் நடவடிக்கைகளை நியாயப்படுத்தினார். நகரின் அமைதியை எந்த தீவிர குழுவும் குறைத்து மதிப்பிடுவதை தங்களால் அனுமதிக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

கிழக்கு ஜெருசலேம் நகரத்தில் உள்ள இஸ்லாமியர்களின் புனித இடங்களை இடங்களின் பாதுகாப்பு அண்டை நாடான ஜோர்டான் வசம் உள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் பாலத்தீன போராட்டக்காரர்கள் மீது மேற்கொண்ட எதிர் நடவடிக்கைகளுக்கு ஜோர்டான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் சமரச பேச்சுவார்த்தை செய்யும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா மற்றும் ஐக்கிய நாடுகள் மன்றம் ஆகிய நான்கு தரப்புகளும் இஸ்ரேல்-பாலத்தீன மோதல் குறித்து கவலை வெளியிட்டுள்ளன.

அனைத்து தரப்பினரும் முடிந்த அளவுக்கு கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐநா பாதுகாப்பு கவுன்சில் இஸ்ரேல் பாலத்தீன விவகாரம் குறித்து இன்று விவாதிக்க உள்ளது.
ரமலான் மாத தொடக்கம் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் ஏப்ரல் மத்தியில் தொடங்கியதிலிருந்து இருதரப்பு பதற்றநிலை அதிகரித்து வருகிறது.

இந்தக் காலகட்டத்தில் தொடர்ச்சியான மோதல்களும் நிகழ்ந்து வருகின்றன. ரமலான் மாதம் தொடங்கிய பின்பு இரவு நேரங்களில் இஸ்ரேலிய காவல்துறையினர் மற்றும் பாலத்தீன போராட்டக்காரர்கள் இடையே டமஸ்கஸ் கேட் பகுதியில் மோதல் நடந்தது.

இரவு நேரத்தில் பாலத்தீனர்கள் அந்த இடத்தில் கூடுவதை இஸ்ரேலிய போலீசார் தடுத்ததால் இந்த மோதல் உண்டானது. இதுமட்டுமல்லாமல் தீவிர யூத தேசியவாத சிந்தனையுடைய யூதர்கள் அப்பகுதியின் அருகே மேற்கொண்ட பேரணியும் பாலத்தீனர்களை கோபத்துக்கு உள்ளாக்கியது.

தீவிர பழமைவாத யூதர்களை பாலத்தீனர்கள் தாக்குவது போல காட்டப்படும் காணொளிகளை தொடர்ந்து யூத தரப்பினர் இந்த பேரணியை மேற்கொண்டனர்.

தீவிர யூதர்களும் பாலத்தீனர்களை அதற்கு பழிவாங்கும் விதமாக பதில் தாக்குதல் நடத்தும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.

கிழக்கு ஜெருசலேம் – ஏன் முக்கியம்?
இஸ்ரேல் – பாலத்தீன மோதலின் மையமாக கிழக்கு ஜெருசலேம் உள்ளது. இந்த பகுதி தங்களுக்குத்தான் சொந்தம் என்று இரு தரப்பினரும் கூறுகின்றனர்.

1967ஆம் ஆண்டு நடந்த மத்திய கிழக்கு போருக்குப் பின்பு கிழக்கு ஜெருசலேம் நகரை இஸ்ரேல் ஆக்கிரமித்தது.

1980-ஆம் ஆண்டு இஸ்ரேல் அரசு கிழக்கு ஜெருசலேமை தங்களுடன் இணைத்துக் கொண்டது.

ஜெருசலேம் நகரம் தங்களது தலைநகரம் என்று இஸ்ரேல் கருதுகிறது. ஆனால் சர்வதேச நாடுகள் பலவும் இதை அங்கீகரிக்கவில்லை.

எதிர்காலத்தில் அமையக் கூடும் என்று தாங்கள் நம்பும் சுதந்திர நாட்டுக்கு கிழக்கு ஜெருசலேம் தான் தலைநகராக அமையும் என்று பாலத்தீனர்கள் கூறுகிறார்கள்.

    

Related posts

பாகிஸ்தானில் மற்றுமொரு கொடூரம் – இம்ரான் உத்தரவு

கனடா – பிரிட்டன் வர்த்தக பேச்சுவார்த்தை நிறுத்தம்!

தங்கச் சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 50 பேர் பலி