உலகம்

தொடரும் இஸ்ரேலின் தாக்குதல் – ஹமாஸ் சிரேஷ்ட தலைவர் பலி

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் ஹமாஸ் அமைப்பின் முன்னணி அரசியல் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இதேநேரம் லெபானன் மீது இஸ்ரேல் தாக்குதல்களை ஆரம்பித்திருக்கும் நிலையில் யெமனில் அமெரிக்கா மீண்டும் ஒருமுறை தாக்குதல்களை நடத்திய சூழலில் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரில் நேற்று (23) அதிகாலை நடத்திய தாக்குதலிலேயே ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட தலைவர் ஒருவரான சலாஹ் அல் பர்தாவில் கொல்லப்பட்டுள்ளார். அதிகாலை தொழுகையில் ஈடுபட்டிருந்தபோதும் அவர் தங்கி இருந்த கூடாரத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதன்போது அவரது மனைவியும் கொல்லப்பட்டுள்ளார்.

‘அவரது இரத்தம், அவரது மனைவி மற்றும் தியாகிகளின் இரத்தம், விடுதலை மற்றும் சுதந்திரப் போருக்கு உந்துசக்தியாக இருக்கும். குற்றவாளியான எதிரியால் எமது உறுதியையும் நோக்கத்தையும் முறியடிக்க முடியாது’ என்று ஹமாஸ் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காசாவில் இரண்டு மாதங்கள் நீடித்த போர் நிறுத்தத்திற்கு பின்னர் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்களை ஆரம்பித்தது தொடக்கம் பல சிரேஷ்ட தலைவர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு மற்றும் சட்டமன்ற சபை உறுப்பினராகவும் இருக்கும் பர்தாவில் காசாவில் பல்வேறு தொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருபவராவார். அவரது மரணம் எதிர்கால போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இஸ்ரேல் காசாவில் தனது தாக்குதல்களை தொடர்ந்து முன்னெடுத்ததோடு அதிகாலை தொடக்கம் இடம்பெற்ற தாக்குதல்களில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அதேபோன்று தெற்கு காசாவின் ரபா நகரில் உள்ள தால் அல் சுல்தான் பகுதியில் இருந்து மக்களை வெளியேறுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வீடுகள் மற்றும் அகதி முகாம்களில் உள்ள கூடாரங்களை இலக்கு வைத்தே இஸ்ரேல் சரமாரி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் தெற்கு ரபாவின் அல் நாசர் பகுதியில் உள்ள அஸ்ஹுர் குடும்ப வீட்டின் மீது இடம்பெற்ற வான் தாக்குதலில் எட்டுப் பேர் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. அல் ஹஷாஷ் பகுதியில் இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் மேலும் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

கான் யூனிஸின் அல் பக்காரி பகுதியில் இடம்பெற்ற வான் தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்றுக் காலை கான் யூனிஸில் இருக்கும் குறைந்தது ஆறு வீடுகளை இஸ்ரேல் தாக்கி அழித்ததாக பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் தால் சுல்தான் பகுதியில் இருந்து மக்களை முழுமையாக வெளியேறும்படி இஸ்ரேல் இராணுவம் உத்தரவிட்டுள்ளது. அங்குள்ள மக்களை கால்நடையாக ‘மனிதாபிமான பகுதி’ என்று அழைக்கும் அல் மவாசி பிராந்தியத்திற்கு செல்லும்படி இஸ்ரேல் இராணுவம் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனிதாபிமான பகுதி என்று இஸ்ரேல் குறிப்பிடும் அல் மவாசியில் 2023 ஒக்டோபரில் காசாவில் போர் வெடித்தது தொடக்கம் பல படுகொலைகளையும் நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேபோன்று அந்தப் பகுதி நீர் மற்றும் அடிப்படை சேவைகள் உட்பட போதிய உட்கட்டமைப்புகள் இல்லாத பகுதியாக மாறி இருப்பதோடு நோய் மற்றும் தொற்றுகளும் பரவி வருகின்றன.

கடந்த ஜனவரி 19 ஆம் திகதி அமுலுக்கு வந்த காசா போர் நிறுத்தத்தின் முதல் கட்டம் கடந்த மார்ச் முதலாம் திகதி முடிவடைந்த நிலையில் காசாவுக்கான அனைத்து உதவிகளையும் முடக்கிய இஸ்ரேல் கடந்த செவ்வாக்கிழமை தொடக்கம் உக்கிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.

அது தொடக்கம் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 630ஐ தாண்டி இருப்பதோடு காசா போரில் கொல்லப்பட்ட ஒட்டுமொத்த பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 50,000ஐ நெருங்கியுள்ளது.

ஹமாஸ் தடுத்து வைத்திருக்கும் எஞ்சிய பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே காசாவில் மீண்டும் தாக்குதலை ஆரம்பித்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

எனினும், நெதன்யாகு பணயக்கைதிகளை கைவிட்டிருப்பதாக குற்றம்சாட்டும் ஹமாஸ் அமைப்பு, போரை முடிவுக்குக் கொண்டுவரும் பேச்சுவார்த்தையை மறுத்து போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி இருப்பதாகவும் சாடியுள்ளது.

இந்நிலையில் நெதன்யாகு அரசுக்கு இஸ்ரேலுக்குள்ளும் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. காசாவில் போரை ஆரம்பித்தது மற்றும் உள்ளூர் உளவுச் சேவை தலைவரை பதவி நீக்கியதற்கு இஸ்ரேலிய அரசுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. டெல் அவிவ், ஜெரூசலம் மற்றும் ஏனைய பல இஸ்ரேலிய நகரங்களில் கடந்த சனிக்கிழமை இரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் 100,000க்கும் அதிகமானவர்கள் திரண்டதாக ‘தி டைம்ஸ் ஒப் இஸ்ரேல்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

காசாவில் உள்ள பணயக்கைதிகளின் குடும்பத்தினர் நடத்திவரும் வாராந்த ஆர்ப்பாட்டங்களின் தொடர்ச்சியாகவே இந்த பிரமாண்ட ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

லெபனான், யெமனிலும் பதற்றம்

காசாவில் மீண்டும் போர் வெடித்த சூழலில் அது மீண்டும் ஒருமுறை லெபனானிலும் பரவியுள்ளது. லெபானனில் இருந்து இஸ்ரேல் மீது ரொக்கெட் தாக்குதல்கள் இடம்பெற்றதை அடுத்து இஸ்ரேல் நடத்திய புதிய சுற்று வான் தாக்குதல்களில் ஏழுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமது நாடு புதிய போர் ஒன்றுக்கு இழுத்துச் செல்லப்படுவதாக லெபனான் பிரதமர் நவாப் சலாம் எச்சரித்துள்ளார்.

‘லெபனானில் உள்ள டஜன் கணக்கான ஹிஸ்புல்லா இலக்குகள் மீது இரண்டாவது சுற்று தாக்குதலை நடத்த’ இஸ்ரேல்; பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ராயேல் காட்ஸ் உத்தரவிட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது கடந்த நவம்பர் 27 ஆம் திகதி அமுலுக்கு வந்த போர் நிறுத்தம் தொடக்கம் லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய பாரிய தாக்குதலாக இருந்தது.

இதில் ஒரு குழந்தை உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டு 40 பேர் காயமடைந்ததாக லெபனான் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக லெபனானில் இருந்து வீசப்பட்ட மூன்று ரொக்கெட் குண்டுகளை வடக்கு இஸ்ரேலிய சிறு நகரான மெட்டுலாவில் வைத்து இடைமறித்ததாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. இதில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் அது கூறியது.

லெபனானில் ஹிஸ்புல்லா மற்றும் பலஸ்தீன தரப்புகள் என பல்வேறு போராட்டக் குழுக்கள் இயங்குகின்ற நிலையில் எந்தத் தரப்பும் இந்த ரொக்கெட் தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. இதில் தமக்கு தொடர்பு இல்லை என்றும் தொடர்ந்து போர் நிறுத்தத்தை கடைப்பிடிப்பதாகவும் ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

மூன்று ரொக்கெட் லோஞ்சர்களை செயலிழக்கச் செய்ததாக குறிப்பிட்டிருக்கும் லெபனான் இராணுவம் இது பற்றி விசாரணை நடத்துவதாகவும் கூறியுள்ளது.

இது ஓர் ஆண்டுக்கு மேல் நீடித்த இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவந்த அமெரிக்கா மற்றும் பிரான்ஸின் மத்தியஸ்தத்திலான போர் நிறுத்த உடன்படிக்கையை பலவீனப்படுத்துவதாக உள்ளது.

போர் நிறுத்த உடன்படிக்கையின்படி இஸ்ரேல் மீது போராட்டக் குழுக்கள் தாக்குதல் நடத்துவதை தடுப்பதற்கு தெற்கு லெபனானில் ஆயிரக்கணக்காக லெபனான் துருப்புகளை நிலைநிறுத்த இணக்கம் எட்டப்பட்டது.

இதேவேளை இஸ்ரேலின் பல பகுதிகளிலும் நேற்றுக் காலை வான் தாக்குதல் சைரன் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்ட நிலையில் யெமனில் இருந்து வீசப்பட்ட ஏவுகணை ஒன்றை இடைமறித்ததாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

காசாவில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியதை அடுத்து யெமனின் பெரும்பகுதியில் ஆட்சியில் உள்ள ஈரான் ஆதரவு ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது தொடர்ந்து ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறார்கள்.

கடந்த வெள்ளிக்கிழமையும் (21) இவ்வாறான ஏவுகணை ஒன்றை இஸ்ரேல் இடைமறித்திருந்தது.

‘காசா மீதான தாக்குதல் நிறுத்தப்படும் வரை இஸ்ரேல் வான் பகுதி பாதுகாப்பாக இருக்காது’ என்று ஹூத்திக்கள் எச்சரித்துள்ளனர்.

இதனிடையே யெமன் மீது அமெரிக்கா கடந்த சனிக்கிழமை மீண்டும் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஹுதைதா விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக ஹூத்தி ஊடகம் குற்றம்சாட்டியுள்ளது. செங்கடற்கரை நகராக ஹுதைதாவில் உள்ள விமான நிலையத்தை இலக்கு வைத்து மூன்று தாக்குதல்களை நடத்தியதாக ‘அல் மசிரா’ தொலைக்காட்சி குறிப்பிட்டுள்ளது.

செங்கடலில் செல்லும் இஸ்ரேலுடன் தொடர்புபட்ட கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து ஹூத்திக்கள் எச்சரித்தது தொடக்கம் கடந்து ஒரு வாரத்திற்கு மேலாக அமெரிக்கா யெமனில் வான் தாக்குதல்களை நடத்தி வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எண்ணெய் கப்பலின் பணியாளர்களை தேடும் நடவடிக்கை தொடர்கிறது

கொரோனா : குணமடைந்தோர் எண்ணிக்கை 87 இலட்சத்தை கடந்தது

பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான்: எரிபொருள் தட்டுப்பாட்டால் விமானங்கள் இரத்து