மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் உறுதியான தீர்மானத்தை விரைவாக எடுக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம்.
மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் காணப்படும் சட்ட சிக்கலுக்குத் தீர்வு கண்டால், உள்ளூராட்சிமன்றத் தேர்தலைத் தொடர்ந்து மாகாண சபைத் தேர்தலை நடத்தலாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்தார்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்கள் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
உள்ளுராட்சிமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் முதலாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
சட்ட மூலத்தை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஒருவேளை சட்டமூலம் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டால் நீதிமன்றத்தின் வியாக்கியானம் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும்.
நீதிமன்றத்தின் வியாக்கியானத்துக்கு அமைய சட்டமூலம் வெகு விரைவாக நிறைவேற்றப்பட்டால் புதிய திருத்தத்துக்கு அமைய தேர்தலுக்கான பணிகளை முன்னெடுத்து வேட்பு மனுத்தாக்கலைக் கோருவோம்.
ஏப்ரல் மாதமளவில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
எவ்வாறு இருப்பினும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னரே அடுத்தகட்ட பணிகளுக்குத் திகதி தீர்மானிக்க முடியும்.
ஆகவே சட்டமூல உருவாக்கத்தை விரைவுபடுத்துமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம். விரைவாகத் தேர்தலை நடத்துவதற்கான இயலுமை காணப்படுகிறது.
மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு காணுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம்.
அத்துடன் தேர்தல் முறைமை தொடர்பில் தெரிவுக்குழுக்களிடம் எமது யோசனைகளை முன்வைத்துள்ளோம்.
காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வுக் கண்டால் உள்ளுராட்சிமன்றத் தேர்தலைத் தொடர்ந்து மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும்.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகளுடன் வெளிப்படைத்தன்மையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராகவுள்ளோம்.
காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம் என்றார்.
-இராஜதுரை ஹஷான்