அரசியல்உள்நாடு

தேசியப் பட்டியல் மூலமாக பாராளுமன்றம் செல்ல மாட்டேன் – சுமந்திரன்

மக்களால் நிராகரிக்கப்பட்ட தாம் தேசியப் பட்டியல் மூலமாக பாராளுமன்றம் செல்ல மாட்டேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், “எங்களை விட்டு விலகி தனித்துச் சென்றவர்களுக்கு எந்தவிதமான ஆணையையும் கொடுக்காமல் தமிழரசுக் கட்சிக்கு வடக்கு – கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் பிரதான ஆணையைக் கொடுத்திருக்கின்றார்கள்.

அதற்காகத் தமிழரசுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றோம்.”

“மக்கள் முன்பாக வந்து தேர்தலில் போட்டியிட்டு மக்களால் நான் தெரிவு செய்யப்படாத சூழலில் தேசியப் பட்டியல் மூலமாக நாடாளுமன்றம் செல்வதை விரும்பவில்லை.”

“நடைபெற்ற முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றியீட்டிய தேசிய மக்கள் சக்திக்கு எங்களது வாழ்த்துதல்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இதுவொரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி. இந்தப் பிரதிநிதித்துவ முறைமை வந்த பிறகு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத் தனித்து ஒரு கட்சி எடுப்பது மிகவும் கடினமானதாக இருந்திருக்கின்றது.

உண்மையைச் சொல்லப்போனால் தேர்தல் முடிவுகளோடு எந்தக் கட்சிக்கும் இப்படியான பெரும்பான்மை கிடைத்தது இல்லை. 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வித்தியாசமான தேர்தல் முறையிலே ஆறில் ஐந்து பெரும்பான்மை ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான அரசுக்குக் கிடைத்திருந்தது.

அப்படியான ஒரு பெரும்பான்மை கிடைக்காது என்ற அடிப்படையிலும் தான் இந்தப் புதிய முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.

2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வந்த கையோடு மஹிந்த ராஜபக்ஷ கூட தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுத்திருக்கவில்லை.

அதற்குப் பின்னர் கட்சி மாறல்கள், கட்சித் தாவல்கள் ஊடாகத்தான் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தது.

ஆனால், இந்தத் தடவை மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பதற்கும் அப்பால் சென்று 159 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி பெற்றிருக்கின்றது.

இது உண்மையில் வியத்தகு வெற்றி. அப்படியான வெற்றியை ஈட்டியவர்களுக்கு மீண்டும் என்னுடைய பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இதில் இன்னொரு விடயமாக கடந்த பாராளுமன்றத்திலே மூன்றே மூன்று ஆசனங்களை வைத்திருந்த தேசிய மக்கள் சக்தி இந்த பாராளுமன்றத்தில் 159 ஆசனங்களைத் தனித்துப் பெற்றிருப்பது இன்னொரு சாதனை.” – என்றார்.

Related posts

பெண்ணின் DNA அறிக்கை வெளியானது

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுமாறு கோரிக்கை

பெண்காதி விடயத்தில் அடம்பிடிக்கும் றவூப் ஹக்கீம் : இஸ்லாமிய வழிமுறையை ஏற்க வேண்டும் – ஐக்கிய‌ காங்கிர‌ஸ்