தெஹிவளையில் அமைந்துள்ள பாதியா மாவத்தை பள்ளிவாசலை அனுமதி அற்ற கட்டடம் என்பதன் பேரில் அந்த இடத்தில் இருந்து அகற்றுவதற்கான உத்தரவைப் பெறுவதற்காக கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை நகர அபிவிருத்தி அதிகார சபை இன்று (04) வாபஸ் பெற்றது.
2014 ஆம் ஆண்டில், பாதியா மாவத்தை பள்ளிவாசல் அந்த இடத்தில் அமைந்திருப்பது குறித்து தீவிர பௌத்த சக்திகள் பிரதேச பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்திருந்தன.
இந்தப் பள்ளிவாசலின் பதிவு தொடர்பான ஆவணங்களை முறையாக சமர்ப்பித்ததன் மூலம், பிரதேச பொலிஸ் பிரிவு மட்டத்தில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
2015 ஆம் ஆண்டில், இன ரீதியாக தூண்டப்பட்டவர்களால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், பள்ளிவாசல் வளாகத்தில் சட்டவிரோத கட்டிடங்கள் இருப்பதாகக் கூறி , கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. தேவையான அனுமதிகள் பெறப்பட்டிருப்பதாகக் கூறி பள்ளிவாசல் நிர்வாக சபையினர் அந்த விண்ணப்பத்தை முறையாக எதிர்த்தனர்.
இந்த நிலையில் நிர்வாக சபையின் வழக்கறிஞர்கள் எழுப்பிய நுட்பமான ஆட்சேபனையைத் தொடர்ந்து நகர அபிவிருத்தி அதிகார சபை வழக்கை வாபஸ் பெற வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகியது.
இதற்கிடையில் , மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் ஏனைய சட்ட அமுலாக்கல் அதிகாரிகளிடமும் மேற்படி பள்ளிவாசலுக்கு மேற்கொள்ளப்பட்ட இடைஞ்சல்கள் தொடர்பான பல முறைப்பாடுகளை நிர்வாக சபையினர் முன்வைத்திருந்தனர்..
அதைத் தொடர்ந்து, UDA ஏப்ரல் 2019 இல் நீதவான் நீதிமன்றத்தில் ஒரு புதிய வழக்கைத் தாக்கல் செய்தது, அதை எதிர்த்து பள்ளிவாசல் நிர்வாக சபையினர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், UDA-க்கு எதிராக தடை உத்தரவொன்றைப் பிறப்பித்ததோடு நீதவான் நீதிமன்றத்திடமிருந்து அசல் வழக்குப் பதிவை கோரியது.
இந்த இரண்டு சட்ட மன்றங்களிலும் இந்த வழக்கு விவாதத்துக்கு போது, பிணக்கை இணக்கமாகத் தீர்ப்பதற்கு நிர்வாக சபையினர் UDA-வுடன் மேற்கொண்ட கலந்துரையாடல்களின் விளைவாக, பள்ளிவாசலின் நிலப் பரப்பு மேலும் அதிகரிக்கப்பட்டது.
UDA-வுடன் மேற்கொள்ளப்பட்ட உடன்பாடுகளின் அடிப்படையிலான வேறு பல பணிகளையும் நிர்வாகத்தினர் மேற்கொண்டனர். இதன் விளைவாக, 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், பள்ளிவாசல் கட்டிடத்தை விருத்தி செய்வதற்கான புதிய அனுமதியையும் UDA பள்ளிவாசல் நிர்வாக சபையினருக்கு வழங்கியது.
UDA இன் இந்த முன்னேற்றகரமான விடயங்களை நீதவான் நீதிமன்றுக்கு தெரிவிக்கப்பட்டு வழக்கு UDA இனால் வாபஸ் பெறப்பட்டதோடு 10 வருட கால சட்டப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இந்தப் பள்ளிவாசல் இலக்கு வைக்கப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிரேஷ்ட சட்டத்தரணி திரு. ஷிராஸ் நூர்தீன் 10 வருட காலமாக இடைவிடாமல் பள்ளிவாசலுக்கு நீதி நிலை நாட்டப்பட்ட வேண்டும் என்பதில் குறியாக இருந்து பாடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருடன் சட்டத்தரணிகளான ருஷ்தி ஹபீப், ஷஃப்ராஸ் ஹம்சா, மகேஷ் பேருகொட மற்றும் மைத்ரி குணரத்ன PC ஆகியோரும் சட்ட நடவடிக்கைகளில் பங்குபற்றினர்.
அத்துடன், திரு. பசன் வீரசிங்க.நீதவான் நீதிமன்றத்திலும் நகர அபிவிருத்தி அதிகார சபையிலும் பள்ளிவாசல் நிர்வாக சபையை பிரதிநிதித்துவப்படுத்தி ஆஜராகினார்.
முன்னாள் அமைச்சர்கள் பௌசி மற்றும் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட பல அரசியல் தலைமைகள் இந்த விவகாரத்தை இணக்கமான தீர்வு மூலம் தீர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டன ர்.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் பள்ளிவாசல் நிர்வாக சபை சார்பாக பசன் வீரசிங்க, அஞ்சனா ரத்னசிறி ஆகியோர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலியா பீரிஸ் தலைமையில் ஆஜரானார்கள்.
நீதிக்காக உறுதியாக நின்று இந்தப் பிரச்சினையை இணக்கமாக தீர்க்க கடுமையாக உழைத்த இந்தப் பள்ளிவாசலின் நிர்வாக சபை, நாடு முழுவதும் உள்ள பள்ளிவாசல் நிர்வாக சபைகளுக்கு நல்லதொரு சான்றாக அமைகிறது.
வீடியோ