உயிர் பாதுகாப்புக்காக வழங்கிய துப்பாக்கிகளை திருப்பித் தருமாறு பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, இன்னும் 42 நபர்கள் தங்கள் துப்பாக்கிகளை ஒப்படைக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று (02) பிற்பகல் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனை வௌிப்படுத்தினார்.
துப்பாக்கிகளை ஒப்படைக்காத நபர்கள் தற்போது உயிருடன் இருக்கிறார்களா? அல்லது அவர்கள் நாட்டில் வசிக்கிறார்களா? என்பது குறித்து விசாரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
துப்பாக்கிகளை ஒப்படைக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,
“தற்போது, துப்பாக்கிகளை ஒப்படைக்காதவர்கள் 42 பேர் மட்டுமே உள்ளனர்.
இவர்கள் உயிருடன் இருக்கிறார்களா?, இந்த நாட்டில் வாழ்கிறார்களா? என்பதை நாங்கள் விசாரித்து வருகிறோம்.”
துப்பாக்கிகளை ஒப்படைக்காததற்காக இவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. “இது விரைவில் நடக்கும்” என்றார்.