அரசியல்உள்நாடு

தற்போதைய அரசாங்கம் மக்கள் ஆணையை புறக்கணித்து, ரணில் முன்னெடுத்த IMF இணக்கப்பாட்டையே முன்னெடுத்து வருகிறது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

பெரும் மக்கள் ஆணையையும், கூடிய ஆசனங்களையும் பெற்று, பாராளுமன்ற வரத்தைப் பெற்றுக் கொண்ட தற்போதைய அரசாங்கம், தொடக்கத்தில் IMF இணக்கப்பாடு குறித்து மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மறந்து விட்டு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தினால் முன்னெடுத்து வரப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளையே தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது. இது கடும் துரோக செயலாகும். மக்களை ஏமாற்றும் செயலாகும்.

எதிர்க்கட்சியில் இருந்தபோது IMF ஒப்பந்தத்தில் உள்ள குறைபாடுகளை பேசினர். அதனை சரி செய்து புதிய ஒப்பந்தத்துக்கு செல்வதாக மக்கள் மத்தியில் வாக்குறுதியளித்தனர். ஆனால் அதிகாரத்துக்கு வந்த பின்னர் அந்த வாக்குறுதிகளை மீறியுள்ளனர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தலைமையில் நீர்கொழும்பு பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

நமது நாடு இருதரப்பு மற்றும் சர்வதேச பிணைமுறி பத்திரதாரர்களுடன் கடன் மறுசீரமைப்பு திட்டத்தை ஆரம்பித்த போது இந்த கடன் மறுசீரமைப்பு மூலம் நாட்டுக்கு எந்த நன்மையும் ஏற்படாது என்று ஐக்கிய மக்கள் சக்தியும் மக்கள் விடுதலை முன்னணியும் கூறியுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பிற்குள் இருந்து கொண்டு நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் புதிய சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி பல விடங்களை பரிந்துரைத்தது.

அப்போது ஜே.வி.பியும் புதிய கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தைச் செய்து கொண்டு புதிய வேலைத்திட்டத்திற்கு செல்லவுள்ளதாக தெரிவித்தது.

வெற்றிபெற்ற பின்னர் தாங்கள் கூறியதை மறந்துவிட்டு, நாட்டு மக்களுக்கு நன்மை பயக்காத ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் முன்னெடுத்த இணக்கப்பாட்டையே தொடர்ந்து வருகிறது என்று சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாக, மக்களின் அழுத்தம் மற்றும் கடன்சுமை அதிகரித்துள்ளன. மற்றும் சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரான குழந்தைகள், தாய்மார்கள் மற்றும் இளைஞர்கள் பெரும் பாரபட்சமான விளைவைக் எதிர்கொண்டுள்ளனர்.

இந்த இணக்கப்பாட்டின் மூலம், இறுதியில் செலுத்த வேண்டிய கடனைக் குறைப்பதற்குப் பதிலாக, மேலதிகமாக 2.3 பில்லியன் டொலர் கடனையும் சேர்த்து செலுத்த வேண்டியுள்ளது.

ஏலவே இருந்த கடனை விட அதிக கடனை செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சர்வதேச பிணைமுறி பத்திரதாரர்களுடனான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் லாசார்ட் கிளிப்பர்ட் சான்ஸ் (Lazard and Clifford Chance) என்ற நிறுவனம் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தியது. இதே நிறுவனம் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் மூலம் கானாவுக்கு கிடைத்த நிவாரணத்தை எமது நாட்டுக்கு பெற்றுக்கொள்ள முடியாது போனது. கானாவுக்கு செலுத்த வேண்டிய கடனில் 37% வெட்டுக்கு இணக்கப்பாடு காணப்பட்டது.

ஆனால் இங்கு கடன் வெட்டிக்குப் பதிலாக, நமது நாடு இறுதியில் இருந்ததை விட அதிக கடனை செலுத்த வேண்டிய நிலைக்கு வந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

எனவே நாடு என்ற வகையில் பாதகமான இணக்கப்பாடுகளில் ஈடுபடாமல், இது தொடர்பில் முதலில் பாராளுமன்றத்தின் கருத்தை கேட்க வேண்டும். இலங்கைக்கு பாதகமான இணக்கப்பாட்டில் ஈடுபடக் கூடாது.

எமது நாட்டின் கடன் சுமை அதிகரிக்கும் போது சுகாதாரம், கல்வி, விவசாயம், மீன்பிடி போன்ற துறைகளில் பல பிரச்சினைகள் ஏற்படும்.

இது தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

Related posts

“ஜனாதிபதி தேர்தலை நடத்த இடைக்கால தடை மனு: ரணில் வெளியிட்ட அறிவிப்பு”

ஜனாதிபதி ரணில் எமது கட்சியை இரண்டாக்கி விட்டார் – இதுதான் எமக்கு கிடைத்த பரிசு – நாமல்

ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த முதல் செயற்பாட்டாளர் கைது செய்யப்பட்டார்