பிரித்தானிய அரசாங்கத்தைக் கண்டிப்பதை விடுத்து, வழங்கிய வாக்குறுதிக்கு ஏற்ப தற்போதைய அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உடனடியாக கொண்டுவரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையர்கள் நால்வருக்கு எதிரான பிரித்தானியாவின் தடை குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் லெம்மி அறிவித்த தடைகள், இலங்கையில் இதுவரையில் முன்னெடுக்கப்படாத தேசிய நல்லிணக்க செயற்பாட்டைக் குழப்புகிறது என இலங்கை அரசாங்கம் கூறுவது வேடிக்கையாக உள்ளதென மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
டேவிட் லெம்மி, தேர்தல் பிரசாரத்தின் போது தந்த வாக்குறுதிகளுக்கு ஏற்பவே செய்துள்ளதாகவும் கூறுகிறார்.
எனினும், தேசிய மக்கள் சக்தி தேர்தல் பிரசாரத்தின் போது உறுதியளித்த, அரசியலமைப்பு செயற்பாடு தற்போது எங்கே எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரகலய போராட்டத்தின் பின்னர், இனி இனவாதம் பயன்தராது என பலர் அதனைக் கைவிட்டுள்ளனர்.
எனவே, அந்த நிலை மீண்டும் மாறுவதற்கு முன்னர், உடனடியாக புதிய அரசியலமைப்புக்கான பணியினை ஆரம்பித்து தேசிய நல்லிணக்க இலங்கையை அடைய வேண்டும் எனவும் அதுவே பிரித்தானியாவுக்கு அரசாங்கம் தர கூடிய சரியான பதிலாக இருக்க முடியும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.