நாட்டின் ஜனாதிபதி சகல நாடுகளுடனும் இராஜதந்திர உறவுகளைப் பேண வேண்டும். மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்திற்கு எதிர்க்கட்சியும் ஆதரவளிக்கும்.
ஆனால் தற்போதைய அரசாங்கம் கூறியதற்கும் செய்வதற்கும் இடையில் கடுமையான முரண்பாடுகள் காணப்படுகின்றன.
மின்சாரக் கட்டணம், எண்ணெய் விலைக் குறைப்பு, எரிபொருள் விலை குறைப்பு, உர மானியம் போன்றவற்றைச் செய்ததாகக் கூறினாலும் அவை இன்னும் நிறைவேற்றப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டம் இன்று (16) மாலை கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து கட்சி தலைமையகம் முன்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
பெரும் மக்கள் ஆணையைப் பெற்று ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், அந்த ஆணையை மதித்து, மக்கள் எதிர்பார்க்கும் சலுகைகளை வழங்கி மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும்.
அரசாங்கம் மக்களுக்கு இந்த பணியை ஆற்றாவிட்டால் எதிர்க்கட்சி மக்களுக்காக முன்நின்று, ஜனநாயக கட்டமைப்பில் குரல் எழுப்பும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூடியபோது, மக்கள் மீதான அரசின் அடக்குமுறைக்கு எதிராக நாம் முன்நிற்க வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு எதிர்க்கட்சி தயார், இதனை எதிர்கொள்வதற்கு எதிர்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை முன்னெடுப்போம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.