அரசியல்உள்நாடு

தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் ஒத்துழைப்பு

அபிவிருத்தி அடைந்த இலங்கையை கட்டியெழுப்ப தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க ஐக்கிய அரபு அமீரகம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்குள் மேற்கொள்ளப்படும் முதலீடுகளை அதிகரிப்பதுடன், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கான தொழில்நுட்ப அறிவை பெற்றுத்தருவதாகவும் இலங்கைக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதுவர் காலித் நசர் அல் அமேரி ( Khaled Nasser AlAmeri) தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதுவர் காலித் நசர் அல் அமேரி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது 150,000 இலங்கையர்கள் தொழில் செய்து வருவதாகவும் அந்த தொகையை மேலும் அதிகரிப்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையின் ஆறாவது மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக ஐக்கிய அரபு அமீரகமே காணப்படும் நிலையில், அந்த சந்தை வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்திக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

அதேபோல் இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால நட்புறவை மேலும் பலப்படுத்திக்கொள்வதோடு இலங்கைக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு உதவியையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் தூதுவர் இதன்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் உறுதியளித்தார்.

எதிர்வரும் காலங்களில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விஜயம்மொன்றை மேற்கொள்ளுமாறும், ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதுவர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அழைப்பு விடுத்தார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் முழு அதிகாரமுள்ள மினிஸ்டர் பதவி வகிக்கும் அஹமட் எம்.ஏ.ஏ. அல் ஷெஹி உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related posts

அரச கிராம உத்தியோகத்தர்களின் தீர்மானம்

ஈஸ்டர் தாக்குதல் : அறிக்கையின் பிரதி ஒன்றை வழங்குமாறு கோரிக்கை

எரிசக்தி அமைச்சுக்கு முன்பாக இன்று பாரிய ஆர்ப்பாட்டம்