அரசியல்உள்நாடு

தயாசிறிக்கு சவால் விடுத்த மைத்திரி.

தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட குழுவினர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் செய்துள்ள ஒப்பந்தங்களை முடிந்தால் வெளியிடுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு சவால் விடுத்துள்ளார்.

ஆகஸ்ட் 8ஆம் திகதி தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட குழுவினர், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொள்ள  ஒப்பந்தம் செய்துள்ளதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தாம் மாத்திரமே பொறுப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் அல்ல என்றும், அவரை சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் தயாசிறி ஜயசேகர நேற்று தெரிவித்திருந்தமை உண்மைக்கு புறம்பானது என முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜயதாச ராஜபக்சவை முன்வைக்கும் பிரேரணை தமது கட்சியின் நிறைவேற்று சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவை நிறைவேற்று சபை நியமிப்பதற்கு முன்னரே, யாப்பு ரீதியாக அவருக்கு கட்சி உறுப்புரிமை வழங்கப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஏலம் விடுவதற்கு ஒரு குழுவும், தமது தனிப்பட்ட அரசியல் இலாபங்களுக்காக கட்சியை ஐக்கிய மக்கள் சக்தியுடன் காட்டிக்கொடுக்க மற்றொரு குழுவும் செயற்படுவதாக மைத்திரிபால சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார்.

Related posts

மிரிஸ்ஸ துப்பாக்கிச் சூடு சம்பவம்; துப்பாக்கிதாரி கைது

சர்வதேச சட்டத்தரணிகள் கூட்டத்தொடரில் – இலங்கை சார்பில் அஜ்ரா அஸ்ஹர்.

மன்னார் பொது வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபா நிதியை நன்கொடை!