அரசியல்உள்நாடு

தமிழ் வாக்காளர்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்குகளை வழங்க வேண்டும் – மனோ கணேசன்

தமிழ் வாக்காளர்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளித்து தமது விருப்பு வாக்குகளை வழங்க வேண்டும் என்பது இனவாதம் அல்ல. அது இன பிரதி நிதித்துவத்தை உறுதி செய்யும் இன உரிமை ஆகும். உண்மையில், நடைமுறையில் உள்ள தேர்தல் முறையின் விருப்பு வாக்கு என்ற முறைமை அதைதான் வலியுறுத்துகிறது.

அதிலும் மிக குறிப்பாக தமிழர்கள் சிறுபான்மையாக வாழும் கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி, கண்டி, கம்பஹா, பதுளை ஆகிய மாவட்டங்களில் தமிழ் வாக்காளர்கள் தமது விருப்பு வாக்குகளை தமிழ் வேட்பாளர்களுக்கு மாத்திரம் வழங்குவது அத்தியாவசியமாகும்.

இதுவே, எமது பிரதிநிதித்துவத்தை பெற்று கொள்ள உள்ள ஒரே வழி. இதை தான் விகிதாசார தேர்தல் முறையும் வலியுறுத்துகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.

நேற்று (10) மாலை கொழும்பு கொச்சிக்கடை ஜம்பட்டா வீதியில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய தமுகூ தலைவர் மனோ கணேசன் மேலும் கூறி உள்ளதாவது,

தமிழர்கள் சிறுபான்மையாக வாழும் கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி, கண்டி, கம்பஹா, பதுளை ஆகிய மாவட்டங்களில் தமிழ் வாக்காளர்கள் கடை பிடிக்க வேண்டிய செயன்முறைமையை நான் எளிமையாக விவரிக்க விரும்புகிறேன்.

முதலில் நமது வாக்காளர்கள், தமது மாவட்டங்ளில் போட்டி இடும் தமிழ் வேட்பாளர்களில் வெற்றி பெறக்கூடிய அணி எது, அதன் சின்னம் எது என தீர்மானிக்க வேண்டும்.

இதன் பின்னர், அந்த அணிக்குள்ளே இருக்கும் தமிழ் வேட்பாளரின் அல்லது வேட்பாளர்களின் விருப்பு வாக்கு இலக்கங்களை கண்டறிய வேண்டும். இதன் பின்னர் தேர்தலின் போது வாக்கு சீட்டில், தாம் தெரிவு செய்துள்ள சின்னத்துக்கு புள்ளடி இட வேண்டும். பின்னர் தமிழ் வேட்பாளர்களின் விருப்பு வாக்கு இலக்கங்களுக்கு புள்ளடி இட வேண்டும். இதோடு இந்த வாக்களிக்கும் கடமை முடிகிறது.

தமிழ் வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்குகளை அளித்த பின்னர் விருப்பு வாக்குகள் மீதமாக இருக்குமானால், அந்த விருப்பு வாக்கை அந்த அணியின் தலைமை வேட்பாளருக்கு அளிக்கலாம். அளிக்காமலும் விடலாம். மூன்று விருப்பு வாக்குகளையும் பயன்படுத்த வேண்டும் என்பது கட்டாயமல்ல.

முதலில், நாம் போட்டி இடும் தொலைபேசி சின்னத்துக்கு புள்ளடி இடுவது கட்டாயம். பின்னர் தமிழ் வேட்பாளரின் விருப்பு வாக்கை அளியுங்கள். கொழும்பில் மனோ கணேசன்-11, லோஷன்-13, கேகாலையில் பரணி-5, இரத்தினபுரியில் சந்திரகுமார்-6, கம்பஹாவில் சசிகுமார்-18, கண்டியில் பாரத்-4, பதுளையில் பகிதரன்-4 ஆகிய விருப்பு வாக்கு இலக்கங்களுக்கு மாத்திரம் வாக்களித்து விட்டு வாக்களிக்கும் பணியை முடிவு செய்யலாம்.

தமிழர்கள் சிறுபான்மையாக வாழும் கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி, கண்டி, கம்பஹா, பதுளை ஆகிய மாவட்டங்களில், இதுவே நமது பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய எம் முன் உள்ள ஒரே ஜனநாயக வழியாகும். என குறிப்பிட்டார்

Related posts

பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு பால்மா நிறுவனங்கள் கோரிக்கை

எரிபொருள் மானியம் கோரும் தனியார் பஸ் உரிமையாளர்கள்  சங்கம்

மீண்டும் எகிறும் கொரோனா – முகக் கவசங்கள் கட்டாயமாகிறது