அரசியல்உள்நாடு

தமிழ் கட்சிகளை ஒற்றுமைப்படுத்தும் கஜேந்திரனின் முயற்சிகளுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும் – மனோ கணேசன் எம்.பி

தமிழ் கட்சிகளை ஒற்றுமைப்படுத்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் எடுத்து வரும் முயற்சிகளுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும் என, பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கஜேந்திர குமார் எடுத்து வரும் இந்த முயற்சிகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்துள்ளதாவது:

தமிழ் கட்சிகளை ஒற்றுமைப்படுத்த கஜேந்திர குமார் எடுத்து வரும் முயற்சிகளுக்கு சகலரும் ஒத்துழைப்பது அவசியம்.

கடந்த கால கசப்புகளை மறந்து விட்டு அவரது முயற்சி வெற்றி பெற சகலரும் ஒத்துழைப்போம்.

பாராளுமன்றத்தில் இதுபற்றி என்னிடமும் கஜன் உரையாடினார். முதலில் வடக்கு கிழக்கு கட்சிகளிடையே ஐக்கியத்தை கொண்டு வாருங்கள். ஏனையவற்றை பிறகு பார்ப்போம், என்றேன்.

சுமார் பத்து வருடங்களுக்கு முன்னரேயே பாராளுமன்றத்தில், தமிழ் எம்பிக்களின் குழு அமைக்க வேண்டும் என்ற யோசனையை நான் முன் வைத்தேன்.

பலர் எனது யோசனையை விரும்பினாலும், அமரர் சம்பந்தன் அதை ஏனோ விரும்பவில்லை. கஜேந்திர குமார் கூட இது பற்றி அக்கறை காட்டவில்லை. இதனால்தான் அந்த எண்ணத்தை நான் கைவிட்டேன்.

நான், எதையும் மனதில் வைத்து கொள்வதில்லை. நிகழ்கால கேள்விகளுக்கு கடந்த காலத்துக்குள் நுழைந்துதான், எப்போதும் பதில் தேட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதுதான் மனோ கணேசனின் பாணி.

தமிழர் ஒற்றுமை என்பது இன்னொரு சகோதர இனத்துக்கு எதிரானது அல்ல. தேச ஒற்றுமைக்கு எதிரானதுமல்ல.

ஆகவே எவரும் இவ்விடயத்தில் அலட்டி கொள்ளத் தேவை இல்லை. நாட்டில், இன்னமும் இனவாதம் முடிவுக்கு வரவில்லை. நீறுபூத்த நெருப்பாக அடியில் இருக்கிறது.

அப்படியே அது,அடியில் இருந்து விட்டுப் போகட்டும். இனவாதம் மீண்டும் வெளியில் எழும்பி வர கூடாது என்றால், ஈழத்தமிழர், மலையக தமிழர், முஸ்லிம்கள் ஆகிய இலங்கையருக்கு, அரசியலமைப்பில் சட்ட ரீதியான பாதுகாப்பு உறுதி படுத்தப்பட வேண்டும்.

இதற்குத்தான், இந்த முன்னேற்பாட்டு தயாரிப்புக்களை செய்து வருகிறேன்.

Related posts

திருகோணமலை எண்ணெய் குதங்களை அபிவிருத்தி செய்ய ஒப்பந்தம் கைச்சாத்து

ஜனாதிபதி நியமனம் வர்த்தமானியில் வெளியீடு

பிளாஸ்டிக் துகள்களின் செறிவு அதிகரிப்பு