வகைப்படுத்தப்படாத

தமிழர்களுடைய உணர்வுகளை மழுங்கடிக்கின்ற மிகவும் ஆபத்தான காலம்: சிறீதரன்

(UDHAYAM, COLOMBO) – எங்களது மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்க நாம் அர்ப்ப அமைச்சுப் பதவிகளுக்காக ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து பதவிகளைப் பெற ஆசைப்படுகின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

மூத்த படைப்பாளி நா.யோகேந்திரநாதன் எழுதிய நீந்திக்கடந்த நெருப்பாறு பாகம் 2 நூல் வெளியீட்டு விழா கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,  மூத்த படைப்பாளி நா.யோகேந்திரநாதன் எழுதப்பட்ட நீந்திக்கடந்த நெருப்பாறு என்னும் நூல் ஈழத் தமிழர்களாகிய எங்களது வரலாற்றை வெளிப்படுத்தி நிற்கிறது.

நாங்கள் முள்ளிவாய்க்கால் வரை அனுபவித்த சொல்லொணாத் துன்பங்களை வெளிப்படுத்தி நிற்கின்றது. இந்த நூல் எமது வரலாற்றில் மிகவும் முக்கியமானதொன்றாகும்.

எமது வரலாற்றை நாளைய தலைமுறையும் அறிய வேண்டும் என்பதற்கான சிறந்த ஆதாரங்களுடன் இந்நூல் படைக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தின் பின்னரான இக்காலப்பகுதியில் நாம் இப்போது எல்லாவற்றையும் மறந்து எமது இலக்கு என்ன என்பதையே மறந்து அர்ப்ப அமைச்சுப் பதவிகளுக்கு ஆசைப்பட்டு எங்களை நாமே காட்டிக்கொடுத்து துரோகம் இழைக்கின்றோம்.

கூட இருந்துகொண்டே அர்ப்ப பதவிக்காக குழி பறிப்பதென்பதை விட துரோகச் செயல் வேறொன்றுமில்லை. எமது மக்கள் பல்வேறுபட்ட துன்பங்களையும் துயரங்களையும் எதிர்நோக்கிக்கொண்டிருக்க, நாம் அர்ப்ப பதவிகளுக்காக எல்லாவற்றையும் மறந்து எமது இலக்கை மறந்து நிற்பதானது எமக்கு ஆரோக்கியமானதல்ல.

இந்த காலம் தமிழர்களுக்குச் சோதனைக் காலம் என்று நான் கூறமாட்டேன். உணர்வுகளை மழுங்கடிக்கின்ற காலமாகவே காணப்படுகின்றது.

இது ஆரோக்கியமானதல்ல என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த நிகழ்வில் வடமாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராசா, விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்களான பீ.அரியரத்னம்,

சு.பசுபதிப்பிள்ளை, பசுபதி அரியரத்தினம் மற்றும் கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளர் குயின்ரஸ், பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Related posts

பிலிப்பைன்ஸ் நாட்டில் 5.7 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்

அங்கொடை துப்பாக்கிச்சூடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

பல் தேய்க்காததால் தாய் சிறுமிக்கு செய்ய கொடூரம்! பதறவைக்கும சம்பவம்!