உலகம்

ட்விட்டர் நிறுவனத்திற்கு ரஷ்யா அபராதம்

(UTV | கொழும்பு) – சர்ச்சைக்குரிய சில பதிவுகளை நீக்காத ட்விட்டர் நிறுவனத்திற்கு அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உலகம் முழுவதும் ட்விட்டர் சமூகவலைதள பயனாளர்கள் கோடிக்கணக்கில் இருக்கின்றனர். இதில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பகிர்வதை தவிர்க்கும் வகையில் ஒவ்வொரு நாடும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

அவை மீறப்படும் போது அபராதமும், தண்டனையும் விதிக்கப்படுகின்றன. அந்த வகையில் ரஷ்யாவில் ட்விட்டர் நிறுவனம் சர்ச்சையில் சிக்கிக் கொண்டது சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

அதாவது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிற்கு எதிராக ட்விட்டரில் தொடர்ந்து கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன. இதற்கு ரஷ்ய ஊடக கட்டுப்பாட்டு அமைப்பான ரேஸ்காமோசர் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. ஆனால் ட்விட்டர் நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த சூழலில் நிதி முறைகேடு வழக்கில் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸே நாவால்னி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அங்கு அவரது தலைமுடி மழிக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் ட்விட்டரில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக நவால்னியின் புகைப்படம், அவரது ஆதரவாளர்களின் போராட்ட புகைப்படங்கள், வீடியோக்கள், சர்ச்சைக்குரிய பதிவுகள் உள்ளிட்டவற்றை நீக்க வேண்டும் என்று ட்விட்டர் நிறுவனத்திற்கு ரேஸ்காமோசர் எச்சரித்தது.

இந்த விஷயத்தில் ட்விட்டர் நிறுவனம் மெத்தனமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து மாஸ்கோவில் உள்ள டெகான்ஸி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், கருத்து சுதந்திரத்தை ரஷ்ய அரசு தடுப்பதாக ட்விட்டர் நிறுவனம் வாதிட்டது.

ஆனால் இளம் வயதினரை போராட்டத்திற்கு தூண்டும் வகையில் பதிவுகள் வெளியாகி வருவதாக ரேஸ்காமோசர் குற்றம்சாட்டியது. இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்திற்கு 3 பிரிவுகளில் 85.63 லட்ச ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

உயிரிழப்புகளில் அமெரிக்கா முதலாவது இடத்தில்

இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா உயிரிழப்பு

இந்திய ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா தொற்று – 125 குடும்பங்கள் தனிமைப்படுத்தலுக்கு