உலகம்

டிரம்ப் சுமத்தும் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லை

(UTV | அமெரிக்கா) –  அமெரிக்க தேர்தலில் பெருமளவில் வாக்குப்பதிவில் மோசடி நடந்ததாக தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என்று அந்நாட்டின் மத்திய தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நடந்து முடிந்த தேர்தலில் தனக்கு சார்பாக விழுந்த 2.7 மில்லியன் வாக்குகள் அழிக்கப்பட்டதாக டிரம்ப் ஆதாரமின்றி குற்றம்சாட்டியிருந்தார். இந்த தேர்தலில் ஏற்கெனவே அதிபர் பதவிக்குத் தகுதி பெற தேவைப்படும் 270 தேர்தல் சபை வாக்குகளை விட அதிகமான இடங்களில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக முன்னிலை நிலவரம் கூறுகிறது. இருப்பினும் சில மாகாணங்களில் வாக்குப்பதிவு முடிவுகள் இன்னும் முழுமையாக வெளி வரவில்லை.

இதனால், தேர்தலில் தான் தோல்வி அடைந்ததாக அதிபர் டிரம்ப் ஏற்க மறுத்து வருகிறார். இருப்பினும், ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை அங்கீகரித்து பல நாடுகளின் தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் 1996ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக ஜனநாயக கட்சிக்கு சாதகமாக அதிக வாக்குகள் கிடைத்துள்ளதால் அந்த மாகாணத்தின் 11 தேர்தல் சபை வாக்குகளும் பைடனுக்கு சாதகமாக கிடைக்கும் என பிபிசி கணித்துள்ளது.

இந்த நிலையில்தான் தேர்தல் வாக்குப்பதிவு மோசடி தொடர்பான அதிபர் டிரம்பின் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக அந்நாட்டின் உள்துறையின் அங்கமான சைபர் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு அமைப்பான சிஐஎஸ்ஏ குழு தெரிவித்துள்ளது.

இந்த குழுதான் தேர்தலில் வாக்குப்பதிவு பாதுகாப்பான வசதிகளுடன் நடத்தப்படுவதை உறுதிப்படுத்தும். இந்தக் குழுவின் அதிகாரிகள், “எங்களுக்கு கிடைத்த தகவலின்படி வாக்குப்பதிவில் மோசடி, முறைகேடு நடந்ததாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் தவறான தகவல்களும் பரப்பப்பட்டு வருகின்றன. தேர்தல் பாதுகாப்பு மற்றும் நேர்மை மீது நாங்கள் முழுமையாக நம்பிக்கை கொண்டுள்ளோம். நீங்களும் அப்படியே கருத வேண்டும். தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பாக சந்தேகம் எழுந்தால் நேரடியாக தேர்தல் அதிகாரிகளிடம் வந்து பேசுங்கள். அவர்கள்தான் நம்பகத்துக்குரிய குரல்களாக வாக்குப்பதிவு நடைமுறைக்கு சான்று கூற அதிகாரம் பெற்றவர்கள்” என்று தெரிவித்தனர்.

Related posts

இந்தியாவில் மே 4 முதல் மீண்டும் ஊரடங்கு

ஈரானின் 2-வது சக்தி வாய்ந்த நபரான சுலைமானியின் கொலைக்கு பழிவாங்குவோம்

ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலகிய ஜோ பைடன்.