உள்நாடு

டிஜிட்டலுக்கு மாறும் பயணச் சீட்டுகளுக்கான விநியோக முறை.

இந்த வருட இறுதிக்குள் ரயில்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகளில் பயணச்சீட்டுக்குப் பதிலாக இலத்திரனியல் முறைமை அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் கங்கநாத் ரூபசிங்க தெரிவித்தார்.

”இரண்டு வருட முன்னேற்றமும் எதிர்காலமும்” என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (08) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டபோதே

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் கங்கநாத் ரூபசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் 2022 ஆம் ஆண்டுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட வீதி அபிவிருத்தித் திட்டங்களுக்கு 390 பில்லியன் ரூபாவை அரசாங்கம் வழங்கியுள்ளதாகவும், 300 பில்லியன் ரூபாவை ஒப்பந்தக்காரர்களுக்காகவும் 90 பில்லியன் ரூபா கடனை செலுத்துவதற்காகவும் செலவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் கங்கநாத் ரூபசிங்க, நாடு எதிர்நோக்கிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் 2022 ஆம் ஆண்டுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட வீதி அபிவிருத்தித் திட்டங்களுக்கு மாத்திரம் கடந்த இரண்டு வருடங்களில் 390 பில்லியன் ரூபாவை அரசாங்கம் வழங்கியுள்ளது.

அந்த பணத்தில் 300 பில்லியன் ரூபா ஒப்பந்தக்காரர்களுக்காகவும் 90 பில்லியன் ரூபா கடனை செலுத்துவதற்காகவும் செலவிடப்பட்டுள்ளது.

மேலும் அரசாங்கத்தின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் வெற்றியானது, நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது என்பதைக் கூற வேண்டும்.

இதன் மூலம் கடந்த பொருளாதார நெருக்கடியின் போது இடைநடுவில் நிறுத்தப்பட்ட பல திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க முடிந்துள்ளது. குறிப்பாக, மத்திய அதிவேகப் பாதையின் முதல் கட்டத்தை ஆரம்பிப்பதற்கான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், மத்திய அதிவேகப் பாதையின் 02 ஆம் மற்றும் 03 ஆம் கட்டம், ருவன்புர அதிவேகப் பாதைத் திட்டம் எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், நிதி முதலீடுகளின் ஊடாக அதுருகிரிய தூண்களின் மேல் அமைக்கப்படும் அதிவேகப் பாதைத் திட்டத்தை நிறைவு செய்வது தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

இதற்காக அரச, தனியார் கூட்டு முதலீடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

மேலும், இந்த வருட இறுதிக்குள் புகையிரதங்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கான பயணச்சீட்டு வழங்க இலத்திரனியல் முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அதிவேகப்பாதைகளில் கட்டணம் அறவிடலும் சில மாதங்களில் இலத்திரனியல் முறைமைக் கட்டமைப்பிற்குள் உள்வாங்கப்படும்.

இலகு ரயில் திட்டத்திற்கான (LRT) முதலீடுகளை மேம்படுத்துவது குறித்து ஜப்பான் அரசாங்கத்துடன் ஆரம்ப கட்ட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.

மேலும், பல புதிய திட்டங்களுக்காக சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம்.

அதன்படி, அடுத்த ஐந்தாண்டுகளில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையை 10% -15% என்ற வேகத்தில் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எஸ். பி. எம் சூரிய பண்டார கொம்பனித்தெரு, நீதிபதி அக்பர் மாவத்தை மற்றும் உத்தரானந்த மாவத்தையை இணைக்கும் புகையிரதப் பாதைக்கு மேலே நிர்மாணிக்கப்பட்ட மேம்பாலத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் நிறைவுசெய்து அடுத்த வாரம் மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்படவுள்ளது.

மேலும், கொஹுவல மேம்பாலம் அதற்கு அடுத்த வாரம் மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்படவுள்ளது. மேலும், துறைமுக நுழைவாயில் பாதையின் பணிகள் செப்டம்பர் முதல் பாதியில் நிறைவடையும்.

இது தவிர வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் நாடளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதில் கடந்த பெப்ரவரியில் ஆரம்பிக்கப்பட்ட 1000 கிலோமீற்றர் கிராமப்புற வீதிகள் திட்டத்தின் கீழ் 320 கிலோமீற்றர் கிராமப்புற வீதிகள் பூர்த்தி செய்யப்பட்டு எஞ்சிய தொகையை ஆகஸ்ட் மாதத்தில் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புகையிரத பதில் பொது முகாமையாளர் சஞ்சய முதலிகே புகையிரதத் துறைக்கு சொந்தமான சுமார் 12,000 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுக்க மக்களுக்கு வாய்ப்பளித்துள்ளோம்.

இதன்படி, தற்போதும், புகையிரதத் துறைக்கு சொந்தமான காணிகளில், அனுமதியின்றி அல்லது அனுமதியுடன் குடியிருப்போர், அந்த நிலங்களுக்கு குத்தகைப் பத்திரம் பெறுவதற்காக பதிவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும், அந்த இடங்களில் இருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன், மஹவ – ஓமந்தை புகையிரதப் பாதையின் நவீனமயமாக்கல் பணிகளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நிறைவு செய்யப்பட இருப்பதுன், பெலியத்தையிலிருந்து கொழும்புக்கான சரக்குப் போக்குவரத்திற்கான புகையிரத சேவை எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

விவசாயிகள், வர்த்தகர்கள் உட்பட கொழும்புக்கு பொருட்களை எடுத்துச் செல்வோர் இந்த சேவையைப் பெற முடியும்.

மேலும், கரையோரப் பாதையில் உள்ள புகையிரத நிலையங்களை தனியார் துறையினருடன் இணைந்து பல்நோக்கு திட்டங்களாக அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதன்படி கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி உள்ளிட்ட 06 புகையிரத நிலையங்கள் தற்போது அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.

புகையிரத இன்ஜின்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, இந்திய அரசு 20 இன்ஜின்களை நன்கொடையாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. அதன் முதல் கட்டத்தை இரண்டு மாதங்களுக்குள் பெற்றுவிடுவோம்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சஷி வெல்கம:

தேசிய போக்குவரத்து ஆணைக் குழு சட்டத்தின் கீழ் பேருந்துகளை மட்டுமே ஒழுங்குபடுத்தல் பணிகளை முன்னெடுக்க முடியும்.

ஆனால் முச்சக்கர வண்டிகள் பாடசாலை மற்றும் அலுவலகப் போக்குவரத்து சேவைகள், டெக்ஸிகள் போன்றவற்றை ஒழுங்குபடுத்தும் வகையில் அந்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, சமூக நலன்புரிக்காக நடத்தப்படும் ‘சிசு செரிய’ மூலம் சுமார் 5,000 பாடசாலைகளை உள்ளடக்கிய வகையில் சுமார் 110,000 பிள்ளைகளுக்கு போக்குவரத்து வசதிகள் வழங்கப்படுகின்றன. மேலும், அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு போக்குவரத்து சேவைகளும் செயல்படுத்தப்படுகிறது.

இது நகர்ப்புற போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கவும், சூழல் மாசடைதலைக் குறைக்கவும் உதவுகின்றது.

மேலும், “கெமி செரிய” மூலம் தொலைதூர கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடிகின்றது.

இதேவேளை, மாகாணங்களுக்கிடையிலான பேருந்துகளுக்கான நேர அட்டவணைகளையும் தயாரித்து நடைமுறைப்படுத்தி வருகிறோம்.

அத்துடன், 0712555555 மற்றும் 1955 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் மூலம் வாடிக்கையாளர் சேவைப் பிரிவைத் தொடர்புகொள்ளும் வாய்ப்பும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், பயணிகள் போக்குவரத்து தொடர்பான முறைப்பாடுகள் பெறப்படுவதுடன், பயணிகள் போக்குவரத்து சேவைகள் தொடர்பான தகவல்களும் வழங்கப்படுகின்றன.

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ்:

எமது பேருந்துகள் தினமும் 5500 முறைகள் பயணம் மேற்கொள்வதோடு இதன் ஊடாக சுமார் 12 இலட்சம் பயணிகள் தங்கள் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்கின்றனர்.

டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தை முறையாக செயல்படுத்துவதன் மூலம், நமது வருமான இழப்பை முற்றிலுமாக நிறுத்த முடியும் என்று நாங்கள் நம்புகின்றோம்.

கடந்த ஆண்டு 400 பேருந்துகளை பழுதுபார்த்து மீண்டும் பயணத்தில் ஈடுபடுத்தியுள்ளோம். இந்த ஆண்டும் 400 பேருந்துகள் பழுதுபார்க்கப்படும்.

மேலும், 1000 புதிய பேருந்துகளை கொள்வனவு செய்யவும் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

அதன்படி 400 பேருந்துகளை உடனடியாக கொள்வனவு செய்வதற்கான கொள்முதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சிசு செரியவிற்கு மேலதிகமாக பாடசாலை மாணவர்கள் போன்று, தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கும் சலுகைக் கட்டணத்தில் பேருந்துகளை வழங்குகிறோம்.

பாடசாலைப் பேருந்துகளுக்கு நாளாந்தம் 811 பேருந்துகளும், பாடசாலை அல்லாத சேவைகளுக்கு 890 பேருந்துகளையும் வழங்குகிறோம்.

பொதுப் பயணிகள் போக்குவரத்துத் துறையின் நவீனமயப்படுத்தலுக்காக மின்சாரப் பேருந்துகளை அறிமுகப்படுத்துதல், நவீன தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பேருந்துகளின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்துதல், பயணிகளுக்குத் தகவல் வழங்கும் ஸ்மார்ட் முறைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கைகளை செயல்படுத்த தற்போது ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போதும் தொலைதூரப் பயணிகளுக்கு இருக்கைகளை முன்பதிவு செய்தல், தொலைதூர சேவைகளின் நேர அட்டவணையை இணையதளம் மூலம் பெறும் வசதி என்பன ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் டிஜிட்டல் மயமாக்கல் மூலம் மேலும் பல சேவைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

Related posts

மேல்மாகாணத்திற்கான ஊரடங்கு தளர்வு குறித்து அறிவிப்பு

​கொரோனாவிலிருந்து மேலும் 117 பேர் குணமடைந்தனர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த!