கட்டுரைகள்

ஜே.வி.பியின் தூண்டிலுக்கு இரையாகும் முதலாளித்துவ சுரண்டல்கள்

(UTVNEWS|COLOMBO) – இலங்கையின் மூன்றாவது அரசியல் சக்தியாக அடையாளம் காணப்படப்போவது ஜேவிபியா? அநுரகுமாரதிஸாநாயக்கவை கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கும் காலிமுகத்திடல் கூட்ட த்தில், கடலெனெத் திரண்ட சனத்திரள் நாட்டுக்கு சொல்லுவது எது? இறுதியாக நடந்த தேர்தலில் (உள்ளூராட்சி) 6,93,875 வாக்குகளைப் பெற்று 431 உறுப்பினர்களைப் பெற்றபோதும் ஒரு சபையையும் ஜே.வி.பியால் கைப்பற்ற முடியவில்லை. எனினும் 3,39,675 வாக்குகளைப் பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சி 407 உறுப்பினர்களுடன் 41 சபைகளைக் கைப்பற்றியமை புதிதாக அறிமுகமான கலப்பு தேர்தல் முறையின் விசித்திரங்களை விளக்கி நிற்கின்றது.இந்த அடிப்படையில் இதுவரைக்கும் மூன்றாவது அணி மக்கள் விடுதலை முன்னணிதான் (ஜே.வி.பி). எனினும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு உள்ளூராட்சித் தேர்தலில் கிடைத்த மொத்த வாக்குகள் மூன்றாம் சக்திக்கான பலத்தைக் காட்டுகிறது.இருப்பினும் இக்கட்சிகள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டுச் சேர்வதற்கான சாத்தியமுள்ளதால் இக்கணிப்பிலிருந்து விலக்கப்படுகின்றன. அரசியல் வரலாற்றுக்குள் ஜே.வி.பி காலடி வைப்பதற்கு முன்னர்,இதன் களப்போராட்டமே வரலாறாகப் பதியப்பட்டது.ரோஹண விஜேவீர முதல் சோமவன்ச வரையிலான இக்கட்சியின் தலைமைத்துவ காலங்கள் கட்சியை கோட்பாட்டு ரீதியாக மக்கள் மயப்படுத்தியிருந்தது.வெறும் சித்தாந்தங்களை வாயால் மட்டும் போசாது செயலுருவில் காட்டிய காலமாகவே இவர்களின் தலைமைத்துவ காலங்களை நோக்கலாம். எனினும் அஹிம்சை, ஆயுத மற்றும் அரசியல் போராட்டமென மூன்று திசைகளிலும் சவால் கொடுத்த ஜேவிபியைக் காப்பாற்றும் முயற்சிகள் ஒரு கட்டத்தில் தோற்றுப்போக நேர்ந்தது. கட்சி, பிளவுபட்டு விமல்வீரவன்ஸ தலைமையில் தேசிய சுதந்திர முன்னணியும் குமார் குணரட்னம் தலைமையில் முன்னிலை சோஷலிசக் கட்சியும் உருவாகி கட்சியின் வீரியத்தை வீழ்த்தியது.

இந்த வீழ்ச்சியை நிமிர்த்தி,கட்சியை மக்கள் மயப்படுத்தியதற்கான சான்றுகள் காலிமுகத்திடலில் களை கட்டிமை அநுரகுமாரநதிஸாநாயக்கவின் தலைமைக்கு கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கப்படுகி றது.காலிமுகத்திடல் கூட்டத்தில் கூடியோரும் இக்கட்சிக்கு வாக்களிப்போரும் கொள்கைக்காகவே வாக்களிக்கின்றனர்.இவர்களை எவரும் விலை பேசவும் முடியாது.தொழில்வாய்ப்பு,சலுகைகள், பணம்,கொன்ரக்,கொமிஷன்,சுயநலம் எதுவுமின்றி கட்சியின் கொள்கையை உயிரூட்டி அவர்கள் எதிர் பார்க்கும் தேசத்தை உருவாக்கவே இக்கட்சிக்கு வாக்களிக்கப்படுகிறது.இந்த எதிர்பார்ப்புகள் எப்போது நிறைவேறும்? முதலாளித்துவ சக்திகளை மீறி சமவுடமை சக்திகள் தலையெடுக்குமா?

இதுபற்றியெல்லாம் ஜேவிபியின் ஆதரவாளர்கள் சிந்திப்பதும் இல்லை.இதுவே மாற்றுக் கட்சிக்காரர் களையும் சற்று மனம் தடுமாற வைக்கிறது. ஏகாதிபத்திய ஆட்சியை இல்லாதொழிக்க 2015 ல் ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான கூட்டணியுடன் இணைந்து பாரிய மாற்றத்தை உண்டாக்கிய பெருமையைப் பெற்றுக் கொண்டாலும் தமது ஆதரவாளர்களின் எதிர்பார்ப்புக்கள்,தேர்தல் விஞ்ஞாபனங்களை பூர்த்தி செய்ய முடியாமல் போனதால் மீண்டுமொரு சந்தர்ப்பத்துக்காக,அநுர குமாரதிஸாநாயக்க காத்துக் கொண்டிருந்தார். நல்லாட்சி அரசாங்கம் உருவாகி ஒரு மாத காலத் துக்குள் நடந்த நாட்டின் மிகப்பெரிய ஊழல் (பிணைமுறி) ஜேவிபியை குலுக்கி குடைந்தது. சமவுடமைச் சித்தாந்தம் பேசும் நாம் இத்தனை பெரிய கொள்ளைக்கு வழிசமைத்தோமே? உழைக்கும் மக்களுக்காகக் குரல் கொடுக்க வந்த நாம்,நாட்டு மக்களின் உழைப்பு,வியர்வை, இரத்தத்தை ஒட்டுமொத்தமாக ஒருவர் அள்ளிச் செல்வதற்கு வழிசமைத்தோமே?

நாமுருவாக்கிய நல்லாட்சி அரசு இதற்கு இடம் கொடுத்து விட்டதே? ராஜபக்‌ஷக்களின் ஆட்சியில் இடம்பெற்ற கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், அதிகாரத்துஷ்பிரயோகம் என்பவற்றுக்கு நடவடிக்கை எடுக்க உருவாக்கிய நல்லாட்சி அரசு, கள்வர்களைக் காப்பாற்றுகிறதே? “இனி எவரும் வேண்டாம். தனி வழிசெல்வோம் ஒரு வழி வெல்வோம்”. இதுதான் இம்முறை ஜேவிபி உச்சரிக்கவுள்ள மந்திரம்.ஏன்? நல்லாட்சி அரசாங்கத்தை பழிவாங்க 52 நாள் அரசில் வாய்த்த சந்தர்ப்பத்தை,பயன்படுத்தியிருக்கலாமே.இதையும் செய்யவில்லையே ஜேவிபி. கள்வனைத் தண்டிக்கப் போய்,கயவனைக் கரம்பிடிப்பதா? இச்சிந்தனையே ரணிலைக்காப்பாற்றியிருக்கும்.

அவ்வாறானால் கடைசியாக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை ஏன் கொண்டு வந்தது இக்கட்சி? 52 நாள் அரசில் மஹிந்தவைக் காப்பாற்றியிருந்தால் சரிதானே? இவ்வாறான சிந்தனைகள் ஜே.வி.பியின் சித்தாந்தங்களில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் வரவுள்ள பொதுத் தேர்தலில் ஊழலுக்குச் சேவகம் செய்யாத,சோரம்போகாத கட்சி எனத் தன்னைத்தானே விளம்பரப்படுத்தல், வாக்கு வங்கியை சரிபார்த்தல்,வாக்காளர்களை உஷாராக்கல் போன்ற எதிர்காலத் திட்டங்களை நாடி பிடித்துப்பார்க்கவே ஜனாதிபதித் தேர்தலில் ஜேவிபி களமிறங்குகிறது.வெல்ல முடியாதெனத் தெரிந்தும் போட்டியிடுவதென்றால் பின்னால் ஒரு சங்கதி இருக்கும்.

1982 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரோஹணவிஜவீர இரண்டு இலட்சம் வாக்குகளைப் பெற்ற அதே வேகத்தில் இக்கட்சி வளர்ந்திருந்தால் இன்றைய நிலைமையில் இக்கட்சி தனித்து அரசாங்கத்தையே அமைத்திரு க்க வேண்டும்.இடையில் வந்த பிளவுகள், சவால்களால், பின்னடைவுக்குள் புதைந்து மூழ்கி, மூச்சுத்திணறிய இக்கட்சி,இப்போது பிராணவாயு ஊட்டப்பட்டது போல துள்ளிக்குதிக்கிறதே? ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிதறியதைப்போல் ஐக்கிய தேசிய கட்சியும் உடைந்தால் வாய்ப்புக்கள் வரலாம் என்பதா இவர்களின் எதிர்பார்ப்பு?. கடைசியில் கணக்குப்பார்த்தால் ஶ்ரீலங்கா பொது ஜன பெரமுனவுக்கு வெற்றி வாய்ப்பை தட்டிக்கொடுக்குமா இவர்களின் வியூகம்.

இதை எண்ணி அச்சப்படும் சில முஸ்லிம்கள் ஜேவிபியை ஆதரிக்க அச்சப்படுகின்றனர்.பேசவும் எழுதவும் இலகுவாகவும் கவர்ச்சியாகவும் இருக்கும் யதார்த்தம் நடைமுறையில் இணங்கிச் செல்லாது முரண்டு பிடிப்பதை பலர் அனுபவங்களில் கண்டிருப்பர். இவ்வாறு யதார்த்தம் பேசும் இந்த ஜேவிபி நாட்டில் இடம்பெற்ற அநீதி,களேபரம்,கலவரங்களில் எந்தச் சமூகத்தைக் காப்பாற்றக் களத்தில் நின்றது?.

“அழுதாலும் பிள்ளை அவள்தானே பெற வேண்டும்”மிரண்டாலும் பிள்ளையை தாய்தானே அரவணைக்க வேண்டும்.இந்த நெருக்கங்களே சமூகத் தலைமைகள்,தனித்துவ கட்சிகளின் தேவைகளை சிறுபான்மையினர் மத்தியில் நெருக்கமாக்குகிறது.

சுஐப்.எம்.காசிம்.

Related posts

மக்களை குழப்பி நாட்டை நாசம் செய்ய வேண்டாம் – எதிர் கட்சித் தலைவரை சாடிய டயானா கமகே

சமூகங்களை துருவப்படுத்தும் உணர்ச்சியூட்டல்கள்.

ராஜபக்‌ஷக்களின் தெற்குக் கோட்டைகள் முற்றுகைக்குள்?