வாரியபொல பகுதியில் இலங்கை விமானப்படை பயிற்சி ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கெப்டன் எரந்த கீகனகே தெரிவித்துள்ளார்.
மனிதத்தவறு காரணமாக குறித்த விமான விபத்து இடம்பெற்றதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார்.
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான K-8 போர் பயிற்சி ஜெட் விமானம் மார்ச் 21 ஆம் திகதி வாரியபொல பகுதியில் விபத்துக்குள்ளானது.
விபத்துக்கு வழிவகுத்த சூழ்நிலைகளை விசாரிக்க விமானப்படைத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் ஏழு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிவேக நெடுஞ்சாலை கண்காணிப்பு விஜயத்தில் பங்கேற்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பயிற்சியின் போது ஏற்பட்ட பிழையே பயிற்சி ஜெட் விமானத்தின் விபத்துக்குக் காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டதாகக் கூறினார்.
இருப்பினும், விபத்துக்கான காரணத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஏழு பேர் கொண்ட குழுவின் அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை என்று விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கெப்டன் எரந்த கீகனகே இன்று (25) தெரிவித்தார்.
அதன்படி, விமான விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என அவர் கூறினார்.