சூடான செய்திகள் 1

ஜனாதிபதியுடனான சந்திப்பு இன்னும் இல்லை-தொடரும் போராட்டம்

(UTV|COLOMBO)-பெருந்தோட்டத் தொழிலாளர்களது வேதன அதிகரிப்பை வலியுறுத்தி மேற்கொள்ளப்படுகின்ற பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளாந்த அடிப்படை வேதனம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டத்துக்கு ஏனைய தொழிற்சங்கங்களும் முழுமையான ஆதரவை வெளியிட்டுள்ளன.

பணிப்புறக்கணிப்புக்கு மத்தியில், பல்வேறு தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பிரத்தியேகமாக ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

கடந்த 4ம் திகதி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தங்களது நாளாந்த வேதன அதிகரிப்பை வலியுறுத்தி போராட்டத்தை ஆரம்பித்தனர்.

எனினும் இதுவரையில் வேதன அதிகரிப்பு தொடர்பிலான எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், ஜனாதிபதியை சந்தித்து இந்த விடயத்திற்கு தீர்வு காணவிருப்பதாக நேற்று முன்தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறி இருந்தார்.

எனினும் நேற்றையதினம் பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான குழுவிற்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

பெருந்தோட்ட நிறுவனங்கள் ஏற்கனவே முன்வைத்த 600 ரூபாய் என்ற அடிப்படை வேதன அதிகரிப்பு யோசனையில் இருந்து சிறிதும் அதிகரிக்கப் போவதில்லை என்று தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் திசைத்திரும்பிவிடக்கூடாது என்றும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

சீரற்ற கால நிலையினால் கடல் கொந்தளிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி

தங்கம் கடத்திய 4 பெண்கள் கட்டுநாயக்கவில் கைது