உள்நாடு

ஜனாஸா எரிப்புக்கு உரிய தீர்வு இன்றேல் அமைதிப் போராட்டம் நாடு தழுவிய ரீதியில் தொடரும் [VIDEO]

(UTV | கொழும்பு) – முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விடயத்தில் உரிய தீர்வை இந்த அரசு தராவிட்டால், அரசுக்கு எதிரான இந்த அமைதிப் போராட்டம் ஜனநாயக முறையில், நாடுதழுவிய ரீதியில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கொவிட்-19 காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக, இன்று காலை (23) கொழும்பு, பொரளை, பொது மயானத்துக்கு முன்பாக இடம்பெற்ற அமைதி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

“.. இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னர் வந்த அரசாங்கங்களோடு ஒப்பிடுகையில், மிகவும் மோசமான ஒரு அரசாக தற்போதைய அரசை நாம் பார்க்கின்றோம். இந்த அரசாங்கம் தன்னை திருத்திக் கொள்ளாவிட்டால், எதிர்காலத்தில் பெரும் ஆபத்துக்களை எமது நாடு எதிர்கொள்ள நேரிடும்.

இன்று ஆரம்பமாகியுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து ஜனநாயக முறையில் தமது எதிர்ப்பை வெளிக்காட்டியிருக்கின்றனர். ஆகையால், இன்றிலிருந்தாவது இதனை நிறுத்திக் கொள்ளுமாறு நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இந்த விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு அரசாங்கம் நியமித்திருக்கும் வைத்தியர்கள் மற்றும் நிபுணர்களைக் கொண்ட குழுவில், இனவாதிகளும் மதவாதிகளும்தான் அதிகமாக இருக்கின்றார்களேயொழிய, தகுதியானவர்கள் அதில் உள்வாங்கப்படவில்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது. எனவே, ஒரு சமூகத்துக்கு எதிராக இவ்வாறன திட்டமிட்ட செயற்பாடுகளை இந்த அரசு முன்னெடுக்குமாக இருந்தால், அதைவிட ஒரு கீழ்த்தரமான அரசாங்கத்தை இந்த நாட்டிலே காண முடியாது.

இதேவேளை, அமெரிக்கா, கனடா, லண்டன், பிரான்ஸ், இத்தாலி, கட்டார் போன்ற இன்னும் பல நாடுகளில் வாழும் எமது மக்கள், இந்த மோசமான செயலுக்கு எதிராக ஒன்றுபட்டு குரல்கொடுப்பதை நாம் பார்க்கின்றோம். உலக நாடுகளில் வாழும் எமது மக்கள் இவ்வளவு காலமாக இலங்கைக்கு ஆதரவாகவே குரல் கொடுத்திருக்கின்றனர். ஆனால், இன்று இந்த ஈனச் செயலுக்கு எதிராக அனைவரும் ஒன்றுபட்டு, இலங்கைக்கு எதிராக குரல் கொடுக்கின்றார்கள். எனவே, இந்தச் செயலை இன்றோடு நிறுத்துங்கள்.

மேலும், ஜனாஸா எரிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகக் கூறியுள்ள போதிலும், நேற்று வியங்கல்ல பகுதியில், மோசமான முறையில் உடலங்கள் எரிக்கப்பட்டுள்ளதாக எமக்கு அறியக்கிடைத்தது.

இதற்கு முன்னிருந்த எந்த அரசும் இவ்வாறானதொரு மோசமான செயலை, எமது சமூகத்திற்கு செய்யவில்லை. ஆகையால், இந்த ஈனச் செயலை அரசாங்கம் உடன் நிறுத்தாவிட்டால், எமது சமூகம் மட்டுமல்ல, உலக நாடுகளும், சர்வதேச சமூகமும் ஒருபோதும் இந்த அரசை மன்னிக்கமாட்டர்கள். இது எமது நாட்டுக்கு பேராபத்தாக அமையும்.

ஜனாஸா எரிப்பு விடயத்தில் உரிய தீர்வை இந்த அரசு தராவிட்டால், இந்த ஈனச் செயலை இந்த அரசு தொடர்ந்து முன்னெடுக்குமாக இருந்தால், அரசுக்கு எதிராக இன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைதியான உரிமைப் போராட்டம், நாடு தழுவிய ரீதியில் தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன், இந்த ஈனச் செயலை சர்வதேசமயப்படுத்தி, இதற்கான தக்கபாடத்தைப் புகட்டுவோம்” என்று கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், மக்கள் காங்கிரஸின் தவிசாளர் அமீர் அலி, செயலாளர் எஸ்.சுபைர்தீன் உள்ளிட்ட மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் உட்பட பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

ஊடகப் பிரிவு-

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பல்கலைக்கழக பதிவுக்கான கால எல்லை நீடிப்பு

பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கைது

தேர்தலை பிற்போடும் எண்ணம் அரசுக்கு இல்லை – சந்திரசேன.