அரசியல்உள்நாடு

ஜனாதிபதி வீண் பேச்சுக்களையும் பொய்களையுமே கூறி வருகிறார் – சஜித் பிரேமதாச

தேர்தல் நெருங்கும் நேரத்தில் கிராமத்தின், நகரத்தின் அதிகாரம் குறித்து மக்கள் தெளிவான முடிவை எடுக்க வேண்டும். இந்த முடிவை எடுப்பதில், ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் போது நாட்டிற்கு வழங்கிய தேர்தல் விஞ்ஞாபனங்கள் மற்றும் வாக்குறுதிகளுக்கு என்ன நடந்தது என்பதை ஆராய்ந்து பார்ப்பது மிகவும் முக்கியமானதாகும். தற்போது, ​​சமூகம் கொலைகாரர்களின் பிடியில் சிக்கியுள்ளது.

மிருகத்தனம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் என்பன சமூகத்தை ஆட்கொண்டுள்ளன. எந்நேரத்தில் எங்கு என்ன நடக்கும் என தெரியாதுள்ளது. வீடுகளிலும், வீதிகளிலும், பணியிடங்களிலும், நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்னிலையிலும் துப்பாக்கி சூடுகள் நடக்கின்றன.

பிள்ளைகள், பெற்றோர்கள், பெண்கள் முன்னிலையிலும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. சரமாரியாக துப்பாக்கிச் சூடுகளை நடத்தும் பாதாள உலகக் கும்பல்களின் பிடியில் நாடு சிக்கித் தவிக்கின்றன என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சட்டத்தின் ஆட்சி பறிபோய்விட்டது. அரசிடம் சட்டம் ஒழுங்கை பேணுவதற்கான தேசிய திட்டமொன்று இல்லை. நடக்கும் கொலைகளால் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என அரசாங்கம் கூறுகிறது.

தேசிய பாதுகாப்பு குறித்து டியுஷன் எடுப்பேன் என கூறிய பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு கூட தேசிய பாதுகாப்பு குறித்து டியுஷன் எடுக்க வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டின் பிரஜைகளின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்துவதும், சட்டத்தை அமுல்படுத்துவதும், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் அரச தலைவரின் பொறுப்பாகும்.

இது ஜனாதிபதியின் பொறுப்பாகும். ஆனால் இந்த ஜனாதிபதியின் கீழ் சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்துபோயுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு மேலதிகமாக கிராம மட்டத்தில் சிவில் பாதுகாப்புக் குழுக்களையும் சமூகப் பாதுகாப்புக் குழுக்களையும் நிறுவி, மக்களின் பங்களிப்புடன் சகல பிரதேசங்களையும் பாதுகாக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

உள்ளூராட்சி நிறுவனங்களின் ஊடாக மக்களை மையமாகக் கொண்டு பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து செயற்படுவதன் மூலம் சட்டம் ஒழுங்கைப் பேண முடியும். இதன் ஊடாக பாதாள உலகக் கும்பல்களை மக்கள் பங்கேற்புடன் கட்டுப்படுத்த முடியும்.

பாதாள குழுக்கல், கப்பம் கோரும் குழுக்கள் மற்றும் கொலைகாரர்களை இல்லாதொழிப்ஙதற்கு புதிய வழிமுறைகளைப் பயன்படுத்த வேண்டும். சமூகத்தில் இக்குற்றங்களைத் தடுப்பதற்கு முறையான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும்.

வழமையான வழிமுறைகளை மாத்திரம் வைத்துக் கொண்டு இவற்றுக்கு தீர்வு காண முடியாது. எனவே புதிய வழிமுறைகள் ஊடாக மக்கள் பங்கேற்புடன் இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். புதிய பாதுகாப்பு ஒழுங்குகள் குறித்து சிந்திக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

மேலும் திசைகாட்டி அரசு தலைமையிலான ஜனாதிபதி எழுதிய கடிதத்தால், டொனால்ட் ட்ரம்ப் விதித்த தீர்வை வரி 90 நாட்களுக்கு நிறுத்தப்பட்டதாக பிரதி அமைச்சர் ஒருவர் பிரஸ்தாபித்தார்.

பின்னர் வேறு ஒரு தூதுக் குழு அமெரிக்கா பயணமாகி கலந்துரையாடல்கள் எமக்கு சாதகமாக இறுதி செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தனர்.

இந்த வரியை திருத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதால், இந்த விடயம் தொடர்பாக இரு தரப்பினரும் கூட்டு அறிக்கையை வெளியிட திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்த போதிலும், அவ்வாறான அறிக்கை எதுவும் இன்றுவரை வெளியிடப்படவில்லை.

பட்டப்பகலில் இவ்வாறான பொய்களை சொல்லி மக்களை ஏமாற்றி வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

Related posts

மஸ்கெலியாவில் – முதல் முறையாக மருத்துவ பீடத்திற்கு இருவர் தெரிவாகியுள்ளனர்.

சோதனைச்சாவடி மீது வேன் மோதி விபத்து – பொலிஸ் அதிகாரி பலி

editor

கொரோனா தொற்றாளர்கள் எவரும் தீவிர சிகிச்சை பிரிவில் இல்லை