அரசியல்உள்நாடு

ஜனாதிபதி மாறினாலும், அரசாங்கம் மாறினாலும் ரணில் விக்கிரமசிங்க இணக்கப்பாடு கண்ட சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையே இன்னும் அமுலில் உள்ளது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையின் நிபந்தனைகளை மாற்றியமைக்கப் போவதாக தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டு மக்கள் ஆணையைப் பெற்றுக் கொண்டது.

ஆனால் இன்று அந்த ஆணை காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. வரியைக் குறைப்போம், வெட் வரியைக் குறைப்போம், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் புதிய IMF இணக்கப்பாட்டில் கையெழுத்திடுவோம் என கூறி மக்கள் ஆணையைப் பெற்றுக் கொண்டாலும், இறுதியில் இன்று மக்களின் நம்பிக்கையும் எதிர்பார்ப்புமே வீணாகிப்போயுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கப்பாடு கண்ட சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த மாட்டோம்.

இதனை மாற்றுவோம் என தேர்தல் மேடையில் இந்த அரசாங்கம் கூறினாலும், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தையே தற்போதைய அரசாங்கமும் முன்னெடுத்து வருகிறது.

இந்த உடன்படிக்கையை மாற்றியமைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் இன்று எந்த மாற்றங்களையும் மேற்கொள்ளாது செயல்பட்டு வருகிறது.

ஜனாதிபதியும், அரசாங்கமும் மாறினாலும், பழைய முறைமையே தொடர்ந்து வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இன்று (24) ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

தேசியப் பட்டியல் நியமணம் தொடர்பில் ஆராய்வதை விடுத்து, IMF உடன்படிக்கையில் திருத்தம் செய்வோம் என கூறி ஆட்சிக்கு வந்து, அதைச் செய்யாமை தொடர்பில் ஆராய்வதே தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும்.

மீளாய்வை செய்திருக்கின்றனர். ஆனால் திருத்தங்கள் எதுவும் இல்லை. இது குறித்து ஊடகவியலாளர்கள் தேடிப் பார்க்க வேண்டும்.

தேசியப் பட்டியல் நியமணம் தொடர்பில் ஆராய்வதை விட மக்கள் படும் துயரங்கள் தொடர்பில் பார்க்க வேண்டும். பொருட்களின் விலை அதிகரிப்பினால் வாழ்க்கைச் சுமை அதிகரித்து காணப்படுகிறது. இது தொடர்பில் அவதானிக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

எரிபொருளின் விலைகள் குறைக்கப்படும் என அரசாங்கம் கூறிய போதும், அவ்வாறானதொன்றை அரசாங்கம் செய்யவில்லை.

இவற்றின் விலைகளை குறைக்க வேண்டும் என்றே 159 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஆணையை மக்கள் வழங்கினர். ஆனால் இவைகளை குறைக்காமல் மக்களை ஏமாற்றி வருகின்றனர். தேர்தல் மேடைகளில் சொன்னதை செய்ய முடியாமல் அரசு திணறி வருகிறது.

நாட்டின் 220 இலட்சம் பொது மக்களின் உரிமைகளுக்காக வேண்டி ஐக்கிய மக்கள் சக்தி குரல் எழுப்பி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

அரசு பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு

மின்சார பஸ்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்!

ஹகீம் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்