சூடான செய்திகள் 1

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் புனித நோன்பு பெருநாள் வாழ்த்து செய்தி

(UTV|COLOMBO) புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி அடுத்தவர்களது பசியின் துயரத்தை அனுபவபூர்வமாக உணர்ந்து அவர்களுக்கும் கொடுத்து வாழ்வதற்கு பழக்கும் ஒரு சமயத்தை பின்பற்றும் ஒரு சமூகம் உண்மையில் மனித குலத்திற்கு கிடைத்த கொடையாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்கள் இந்த நோன்பு காலத்தில் லௌகீக இன்பங்களிலிருந்து விடுபட்டு சமயக் கிரிகைகளில் சமூகத்தில் வறியவர்களுக்கும் நலிவுற்றவர்களுக்கும் தமது உழைப்பின் மூலம் கிடைத்த செல்வத்தின் ஒரு பகுதியை வழங்குவதானது அனைத்து தெற்காசிய சமயத் தத்துவங்களும் போதிக்கும் ஆன்மீக நோக்கங்களின் பொதுப்பண்பை வெளிப்படுத்துவதாகவே அமைகின்றது.

உலகின் அனைத்து சமய தத்துவங்கள் மற்றும் நம்பிக்கைகள் ஆகியன மனித நாகரீகத்தின் நீண்ட பயணத்தில் எமக்கு கிடைக்கப் பெற்றவையாகும். அந்த வகையில் மனிதநேயத்தின் பொதுப்பண்புகள் சமய நம்பிக்கைகளை கடந்து நிற்கின்றதாக என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மானிடப் பண்புகளை உயர்வாக மதிக்க கற்றுக்கொடுக்கும் எந்தவொரு சமயமும் மானிடப் பண்பாட்டின் பொதுப்போக்கிலிருந்து விலகுவதற்கு அதன் அடியார்களுக்குவழிகாட்டுவதில்லை.இஸ்லாமிய சமயமும் அத்தகையதொரு சமயமாகும் .

அத்தகையதொரு சமயத்தின் கடமைகளை நிறைவேற்றும் வகையில் நோன்பு நோற்று, உயரிய பண்பாடுகளை வெளிப்படுத்தும் வகையில் இன்றைய தினம் திருநாளைக் கொண்டாடும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் மகிழ்ச்சியான நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு உங்கள் அனைவரதும் பிரார்த்தனைகளால் எம்மைச் சூழ்ந்திருக்கும் அவநம்பிக்கை, சந்தேகம் ஆகியன நீங்கி சகோதரத்துவத்துடன் கைகோர்த்து வாழக்கூடிய சிறந்ததோர் எதிர்காலம் அமையும் என்பதே தமது எதிர்பார்ப்பாகும் என ஜனாதிபதி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஒரு மாத காலம் நோன்பு நோற்று இன்றைய நாளில் புனித நோன்பு பெருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

நன்றியுணர்வு, தாராள மனப்பான்மை உள்ளிட்ட உயர்ந்த எண்ணங்களை உலகுக்கு எடுத்துக்காட்டுவதாய் இன்றைய நாள் அமைந்துள்ளதாக பிரதமர் தனது வாழத்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி ஒற்றுமை, சுதந்திரம், சமத்துவம் மற்றும் மனித விழுமியங்களுக்கு மதிப்பளித்து அனைவரும் ஒருதாய் மக்கள் என்ற ரீதியில் செயற்பட வேண்டுமென்பதை ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் உணர்த்துவதாக பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

தென் மாகாண சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபருக்கு இடமாற்றம்

ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின் விநியோகம் தடை

லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிடவின் மனு மார்ச் 08ம் திகதி விசாரணைக்கு