அரசியல்உள்நாடு

ஜனாதிபதி எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை – முஜிபுர் ரஹ்மான் எம்.பி

ராஜபக்ஷர்களே கடந்த காலங்களில் சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் சுயாதீன நீதிமன்றத்துக்கு எதிராக செயற்பட்டு வந்தனர்.

ஆனால் தற்போதைய அரசாங்கத்திலுள்ள அதிகாரிகளும் ஆணைக்குழுக்களுக்கு எதிராகவே கருத்துக்களை வெளியிடுகின்றனர்.

எனவே இது குறித்து ஜனாதிபதியும் அரசாங்கமும் தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வாழ்க்கை சுமையைக் குறைப்பதற்கு அரசாங்கம் ஏதேனும் நிவாரணத்தை வழங்கும் என மக்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் அவர்களது எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படவில்லை. தேர்தல் காலங்களில் வாக்குறுதிகளைக் கூட இந்த அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியாது போயுள்ளது.

சுகாதார மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களுக்கான வட் வரியை தனது முதலாவது வரவு – செலவு திட்டத்தில் நீக்குவதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்தார்.

ஆனால் ஜனாதிபதி அதற்குரிய எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

மாறாக அவற்றின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்தே செல்கின்றன. அரச உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்பும் திருப்திக்குரியவையாக இல்லை.

கடந்த ஆட்சி காலங்களில் ஆசியர்களுக்கு 20 000 சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட தொழிற்சங்கவாதிகளே இன்று பாராளுமன்றத்தில் இருக்கின்றனர்.

மறுபுறம் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளிலும் தொடர்ந்தும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகிக் கொண்டிருக்கின்றன. மக்கள் அச்சத்திலிருக்கின்றனர்.

இந்த நிலைமைக்கு மத்தியில் பதில் பொலிஸ்மா அதிபர் பொலிஸ் ஆணைக்குழு தொடர்பில் அதிருப்தியை வெளியிட்டிருக்கின்றார்.

இது தொடர்பில் ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். கடந்த காலங்களில் ராஜபக்ஷர்களே சுயாதீன ஆணைக்குழுக்கள் சுயாதீன நீதிமன்றத்துக்கு எதிராக செயற்பட்டு வந்தனர்.

ஆனால் தற்போதைய அரசாங்கத்திலுள்ள அதிகாரிகளும் ஆணைக்குழுக்களுக்கு எதிராகவே கருத்துக்களை வெளியிடுகின்றனர். எனவே தான் இது குறித்து ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் நிலைப்பாட்டைக் கோருகின்றோம்.

தமக்கேற்றவாறு ஆணைக்குழுக்கள் செயற்படுவதில்லை என்று அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

அதிகாரிகளின் தேவைக்கேற்ப செயற்படுவதற்கு ஆணைக்குழுக்கள் நிறுவப்படவில்லை என்பதை அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

-எம்.மனோசித்ரா

Related posts

இன்று இதுவரை 468 பேர் தொற்றாளர்களாக அடையாளம் [UPDATE]

டீசல் குறைப்பை பொறுத்து பேருந்து கட்டணம் மாறும்

மஹாபொல புலமைப் பரிசில் தொகை திங்கட்கிழமை வழங்கப்படும்