அரசியல்

ஜனாதிபதியின் சூழ்ச்சிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அகப்பட கூடாது – முஜிபுர் ரஹ்மான்

ஜனாதிபதியினதும், அரசாங்கத்தினதும் சூழ்ச்சிக்கு அகப்படாமல் தேர்தல்கள் ஆணைக்குழு மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்க வேண்டும்.

மஹிந்தானந்த அளுத்கமகேவின் நிலைக்கு ஜனாதிபதி சென்றுள்ளமை கவலைக்குரியது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி தேர்தல் தற்போது சூடு பிடித்துள்ளது.ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு ரணில் – ராஜபக்ஷ அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து சூழ்ச்சி செய்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடத்த வேண்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நிதி இல்லை என்று குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் பிற்போட்டது.படுதோல்வியடைவதை தவிர்ப்பதற்காகவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அரசாங்கம் பிற்போட்டது.

ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதில்லை.உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஆனால் அவரது கட்சியின் தவிசாளர் மற்றும் பொதுச்செயலாளர் உட்பட அவரது நண்பர்கள் ஜனாதிபதிக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் பதவியில் இருக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்கள்.

இதனால் தான் ஜனாதிபதித் தேர்தல் குறித்து மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியினர் தேர்தல் ஆணைக்குழுவிடம் வலியுறுத்துகிறார்கள்.

அவ்வாறாயின் ஏன் இவர்கள் கடந்த நாட்களில் ஜனாதிபதியின் பதவி காலம் குறித்து சர்ச்சைகளை ஏற்படுத்தினார்கள்.

இவ்வாறான பின்னணியில் தான் ஜனாதிபதியின் பதவி காலம் குறித்து திருத்த சட்டமூலத்தை ஜனாதிபதி முன்வைத்துள்ளார்.

ஜனாதிபதியினதும்,அரசாங்கத்தினதும் சூழ்ச்சிக்கு அகப்படாமல் தேர்தல்கள் ஆணைக்குழு மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்க வேண்டும்.

எதிர்வரும் வாரம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வமான அறிவிப்பை ஆணைக்குழு விடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் கண்டியில் இடம்பெற்ற கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியினர்,தேசியக் கட்சியுடன் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மேடையில் இருந்துக் கொண்டு அழைப்பு விடுக்கிறார்.

இவரது கருத்து நகைப்புக்குரியது.இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதியாக போட்டியிட போவதில்லை.

இவ்வாறான நிலையில் எமக்கு அழைப்பு விடுக்கிறார்.மஹிந்தானந்த அளுத்கமவை போன்று ஜனாதிபதி உரையாற்றுவது கவலைக்குரியது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊழல்வாதிகளை பாதுகாக்கும் வகையில் தான் ஜனாதிபதி செயற்படுகிறார்.

பொருளாதார படுகொலையாளிகள் என்று உயர்நீதிமன்றத்தால் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ராஜபக்ஷர்களுக்கு எதிராக இவர் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

மாறாக எதிர்க்கட்சித் தலைவர் பாடசாலைகளுக்கு பேரூந்து வழங்குவது பற்றி கேள்வியெழுப்புகிறார்.

பொதுஜன பெரமுனவின் ஊழல்வாதிகளின்  நிலைக்கு ஜனாதிபதி சென்றுள்ளமை கவலைக்குரியது என்றார்.

– இராஜதுரை ஹஷான்

Related posts

இனி அரசியல் சண்டி தனங்களுக்கு இடமில்லை – ஜனாதிபதி அநுர

editor

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று ஆரம்பம்

editor

சமய வழிபாடுகளில் ஈடுபட்டார் ஜனாதிபதி அநுர

editor